LATEST NEWS
“டைம் பார்க்கத்தானே வாட்ச்… அதுக்கு எதுக்கு ரூ.25 லட்சம்..?” போலி ரோலக்ஸ் அணிந்த தொழிலதிபரின் மாஸான விளக்கம்..!!
டெல்லியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனர் ரோகன் தவான் என்பவரால் இந்தச் சம்பவம் முதன்முதலில் லிங்க்ட்இன் தளத்தில் பகிரப்பட்டது. ரோகன் தவான், சுமார் ரூ.500 கோடி சொத்து மதிப்பு கொண்ட ஒரு பிரபல தொழிலதிபரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அந்த தொழிலதிபரின் கையில் சந்தை மதிப்பு ரூ.25 லட்சத்திற்கு மேலுள்ள ‘ரோலக்ஸ் டேட்டோனா’ கடிகாரம் மின்னுவதைக் கண்டு ரோகன் அதைப் பாராட்டியுள்ளார். ஆனால், அதற்கு அந்தப் பணக்கார தொழிலதிபர் அளித்த பதில் ரோகனை வியப்பில் ஆழ்த்தியது.
அந்த தொழிலதிபர் சிரித்துக்கொண்டே, “இது உண்மையான ரோலக்ஸ் கடிகாரம் அல்ல; இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில் வெறும் ரூ.10,000 கொடுத்து வாங்கப்பட்ட முதல் தர போலி கடிகாரம்” என்று கூறியுள்ளார். மேலும் அதற்கான சுவாரசியமான காரணத்தையும் அவர் விளக்கினார்: “சமூகத்தில் தற்போது எனக்கு இருக்கும் அந்தஸ்து மற்றும் மதிப்பிற்கு, நான் ஒரு போலி கடிகாரத்தை அணிந்திருப்பேன் என்று யாராலும் ஊகிக்கக்கூட முடியாது. கடிகாரத்தின் முதன்மை வேலை நேரத்தைக் காட்டுவதுதான். மக்கள் எனது கடிகாரத்தைப் பார்த்து மதிப்பிடுவதில்லை, எனது அந்தஸ்தைப் பார்த்துதான் அந்த கடிகாரமே உண்மையானது என்று தாங்களாகவே முடிவெடுத்துக் கொள்கிறார்கள். அப்படியிருக்கும்போது, வெறும் கடிகாரத்திற்காக லட்சக்கணக்கில் பணத்தை வீணடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?” என்று அவர் கேட்டுள்ளார்.
ரோகன் தவானின் இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகளிடையே பலதரப்பட்ட கருத்துகள் உருவாகியுள்ளன. சிலர், “இது அந்தஸ்தைப் பற்றியது அல்ல; மனிதர்களின் சிந்தனைப் போக்கைப் பற்றியது. உங்கள் அடையாளம் மற்றும் நற்பெயர் வலுவாகிவிட்டால், மக்கள் பிராண்டைப் பார்த்து உங்களை மதிப்பிடுவதில்லை, உங்களைப் பார்த்துதான் பிராண்டையே நம்புகிறார்கள்” என்று தொழிலதிபரின் கருத்தை ஆதரித்துள்ளனர். ஆடம்பரப் பொருட்களை பலர் தங்களின் சொந்த மகிழ்ச்சிக்காக வாங்குவதில்லை, மற்றவர்களின் பாராட்டைப் பெறுவதற்காகவே வாங்குகிறார்கள் என்பதையும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேவேளையில், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் போன்ற உலகப் பணக்காரர்கள் தங்களின் அடையாளத்தை நிரூபிக்க விலை உயர்ந்த கடிகாரங்கள் தேவைப்படவில்லை என்பதற்காக சாதாரண ‘கேசியோ’ கடிகாரங்களையே விரும்பி அணிகிறார்கள் என்பதையும் சிலர் உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
