LATEST NEWS
“அந்த ஒரு காரணம்” 4 ஆண்டுகளாக ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த தந்தையின் சடலம்.. மகள் கொடுத்த விசித்திர விளக்கம்.. அதிர்ச்சியில் உறைந்த போலீசார்..!!
மும்பையின் மலாட் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு மூடிய பகல் பராமரிப்பு மையத்தின் வளாகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக ஃப்ரீசரில் பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்த 78 வயது முதியவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022-ஆம் ஆண்டு புற்றுநோய் மற்றும் மாரடைப்பால் உயிரிழந்த தனது தந்தையின் உடலை, அவரது மகள் நீண்ட காலமாக இவ்வாறு மறைத்து வைத்து பாதுகாத்து வந்துள்ளது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த கட்டிடம் மறுசீரமைப்பு செய்யப்பட இருந்ததால், அதை காலி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டபோதுதான் அங்கிருந்த ஃப்ரீசரை சோதித்த போலீசாருக்கு இந்த வினோத உண்மை தெரியவந்தது. மருத்துவச் சான்றிதழின்படி முதியவரின் மரணம் இயற்கையானது என்பதால், அதில் எந்தவொரு சந்தேகத்திற்குரிய குற்றச் சம்பவத்திற்கான ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், உடலும் சேதமடையாமல் பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், தந்தையின் மீது கொண்டிருந்த அதிகப்படியான பாசப் பிணைப்பு காரணமாகவே மகள் இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவில் உள்ள பிரத்யேக உடல் பாதுகாப்புச் சேவை வழங்கும் நிறுவனத்தின் உதவியுடன், எதிர்காலத்தில் தந்தையின் உடலை வெளிநாட்டிற்கு மாற்றி பாதுகாப்பாக வைக்கத் திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காகவே பணத்தைச் சேமித்து சட்டரீதியான ஆலோசனைகளைப் பெற்று வந்ததாகவும் அவர் விசித்திரமான விளக்கமளித்துள்ளார்.
ஒருவர் உயிரிழந்த பிறகு உடலை நீண்ட காலம் பாதுகாப்பதற்கு சட்டரீதியான பல அனுமதிகள் தேவைப்படும் நிலையில், இவ்வளவு காலம் இந்த விவரம் தெரியாமல் மறைக்கப்பட்டிருந்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போது கட்டிட உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் காவல்துறை அதிகாரிகள், முதியவரின் உடலை இறுதிச்சடங்கு செய்வது அல்லது நகராட்சி அமைப்பிடம் ஒப்படைப்பது குறித்து உறவினர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
