LATEST NEWS
அகல்விளக்கு பதிப்பக மோசடி அம்பலம்… கன்னிமாரா நூலகத்தில் 523 போலி நூல்கள்- விசாரணைக்கு முதல்வர் விஜய் உத்தரவு..!!
சென்னை கன்னிமாரா நூலகத்தில் நடைபெற்ற புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக, தமிழக முதலமைச்சர் விஜய் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கியதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தற்போது புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், சென்னை கன்னிமாரா நூலகத்தில் மட்டும் ‘அகல்விளக்கு பதிப்பகம்’ என்ற பெயரில் சுமார் 523 புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளதாகத் தெரிவித்தார். இவற்றில் பறிமுதல் செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட நூல்களும் போலியானவை என்பது தற்போதைய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் உண்மையில் இல்லாத, கற்பனையான எழுத்தாளர்களின் பெயர்களைப் பயன்படுத்திப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலமும் புத்தகங்கள் உருவாக்கப்பட்டு ஊழல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே நூலகத்தில் இருந்த பழைய புத்தகங்களையே புதிய இருப்பு போலக் கணக்கு காட்டியும் முறைகேடுகள் நடந்துள்ளன.
கன்னிமாரா நூலகத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட இந்த நூல்கள் தவிர, பீனிக்ஸ், சிக்மா போன்ற இன்னும் பல்வேறு பெயர்களிலும் மோசடி பதிப்பகங்கள் செயல்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த புத்தக கொள்முதல் ஊழலின் முழு பின்னணியையும் நேர்மையான முறையில் விசாரித்து வெளிக்கொண்டு வர முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
