LATEST NEWS
அம்பையில் சீமானின் டபுள் மாஸ்டர் பிளான்.. கயல்விழி பிரச்சாரம் + ராக்கெட் ராஜா ஆதரவு..! அம்பாசமுத்திரத்தில் சாய்ந்தது முக்குலத்தோர் வாக்குகள்..? அலறும் திராவிட கட்சிகள்..!!
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாகக் களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தொகுதியின் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக மற்றும் அதிமுகவின் ஆதரவுடன் பொது வேட்பாளராகக் போட்டியிட சீமான் விருப்பம் தெரிவித்தபோதிலும், இரு முக்கிய திராவிடக் கட்சிகளுமே தனித்துப் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றன. எனினும், பிற கட்சிகளின் ஆதரவு இல்லாவிட்டாலும் தனித்தே களம் காண்பது என்ற முடிவில் சீமான் உறுதியாக இருப்பதை அடுத்து, நாதகவினர் அம்பாசமுத்திரத்தில் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரமாகத் தொடங்கிவிட்டனர்.
தொகுதியில் கணிசமான எண்ணிக்கையில் உள்ள முக்குலத்தோர் சமூக மக்களின் வாக்குகளை முழுமையாகக் கைப்பற்ற நாதக ஒரு முக்கிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது. அதன்படி, முக்குலத்தோர் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகளும், சீமானின் மனைவியுமான கயல்விழியைப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. அதேபோன்று, மற்றொரு முக்கிய சமூகமான நாடார் சமூகத்தின் வாக்குகளை அறுவடை செய்ய ராக்கெட் ராஜா தரப்பை சீமான் அணுகியுள்ளதாகவும், அவர்கள் நாதகவுக்கு ஆதரவாகச் செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் களப்பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பைச் சாட்டை துரைமுருகனிடம் ஒப்படைக்க நாதக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து வரும் சாட்டை துரைமுருகனின் பிரச்சார பாணி, தேர்தல் நேரத்தில் பெரிய அளவில் கவனத்தைப் பெறும் என்று கட்சியினர் நம்புகின்றனர். “வீட்டுக்கு ஒரு ஓட்டு” என்ற இலக்கை முன்வைத்துத் தேர்தல் பிரசாரத்தைத் திட்டமிட்டு வரும் நாதக, தொகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில் இறங்கத் தயார் நிலையில் உள்ளது. இருப்பினும், அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற வேண்டுமானால் சுமார் 70 ஆயிரம் வாக்குகளைப் பெற வேண்டிய கட்டாயம் சீமானுக்கு உள்ளது. திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய மூன்று கட்சிகளுமே முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களைக் களமிறக்கினால், வாக்குகள் பிரிந்து சீமானின் வெற்றி வாய்ப்பு எந்த அளவுக்குப் பாதிக்கும் என்ற சந்தேகமும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதனால், பலப்பரீட்சை நிறைந்த இந்த இடைத்தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
