“இதுதான் நீங்க சொன்ன மாற்றமா முதலமைச்சரே..? “அதிகாலை 6 மணிக்கு சினிமாவா..? அறிவு கெட்ட தனம்..! தமிழக அரசைக் கிழித்தெறிந்த சீமான்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இதுதான் நீங்க சொன்ன மாற்றமா முதலமைச்சரே..? “அதிகாலை 6 மணிக்கு சினிமாவா..? அறிவு கெட்ட தனம்..! தமிழக அரசைக் கிழித்தெறிந்த சீமான்..!!

Published

on

புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது அதிகாலை 6 மணி முதல் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்துள்ள தமிழ்நாடு அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. ஒரு நாட்டின் மக்களை அறிவிலும், ஆற்றலிலும் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டிய அரசு, அதிகாலையிலேயே அவர்களை திரையரங்குகளுக்கு அழைப்பதை முதன்மையான சாதனையாகக் கருதுவது வெட்கக்கேடானது. திரைப்படம் என்பது மனித வாழ்வின் ஒரு பகுதிதானே தவிர, மனித வாழ்வே திரைப்படம் அல்ல! பொழுதுபோக்கு என்பது மனிதனுக்குத் தேவையான ஓய்வுதானே தவிர, அதுவே மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையாகிவிடக் கூடாது. ஒரு சமூகத்தின் வரலாறு, இலக்கியம், பண்பாடு, அறிவியல், அரசியல், பொருளாதாரம் என அனைத்தையும் திரையுலகத்தைச் சுற்றியே கட்டமைக்க நினைப்பது எத்தகைய ஆபத்தான போக்கு? திரைப்படத்தையே வரலாறாகவும், திரைக்கதையையே வாழ்க்கையாகவும், திரைநாயகர்களையே தலைவர்களாகவும் கருதும் மனநிலையிலிருந்து இளைய தலைமுறையை மீட்டெடுக்க வேண்டிய அரசே திரைமோகத்தில் மேன்மேலும் மூழ்கச் செய்வது பொறுப்புள்ள செயல்தானா?

அதிகாலை எழுந்து படியுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், நூலகங்களுக்குச் சென்று நல்ல நூல்களை வாசியுங்கள், அறிவை விரிவாக்குங்கள் என்று இளைய தலைச்சியை வழிநடத்த வேண்டிய அரசு, அதிகாலை எழுந்து திரைப்படம் பார்க்கச் செல்லுங்கள் என்று ஊக்குவிப்பதுதான் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் ஆட்சிமுறையா? ‘காலை எழுந்தவுடன் படிப்பு’ என்று பாடினான் நம் பாட்டன் பாரதி. ஆனால், இன்றைய ஆட்சியாளர்களோ காலையில் எழுந்தவுடன் திரைப்படம் பார்க்கச் சொல்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் இளைய தலைமுறைக்கு அரசின் வழிகாட்டுதலா? தமிழ்நாட்டில் எத்தனையோ நூலகங்கள் இருக்கின்றன. அவற்றை மேம்படுத்தி, மாணவர்களையும் இளைஞர்களையும் ஒவ்வொரு நாளும் குறைந்தது அரை மணி நேரமாவது வாசிக்க வைக்க என்ன திட்டத்தை உருவாக்கியிருக்கிறது அரசு? ஊர்தோறும் உடற்பயிற்சிக் கூடங்களையும் விளையாட்டுத் திடல்களையும் உருவாக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இளைஞர்களின் திறமைகளை வளர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இவ்வளவு வேகமாக முடிவெடுக்காத அரசு, திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மட்டும் இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன்?

Advertisement

மனிதனின் அறிவாற்றலையும், உடலாற்றலையும் உழைப்பில் ஈடுபடுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை உயர்த்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தன்னிறைவான சமூகத்தைக் கட்டியெழுப்புவதுதானே ஓர் அரசின் முதன்மையான கடமை? அதை விடுத்து, திரைப்படக் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மட்டும் நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகிவிடுமா? விலைவாசி குறைந்துவிடுமா? மக்களின் வறுமை ஒழிந்துவிடுமா? ஏற்கனவே, அரசு ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் மதுக்கடைகளின் நேரத்தை அதிகப்படுத்தியுள்ளது. இணைய வழி மதுவிற்பனை, உணவக மதுக்கூடம் என்று மதுவிற்பனையை அதிகப்படுத்தியுள்ளது. இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசு, போதையை அதிகரிப்பதிலும், பொழுதுபோக்கை விரிவுபடுத்துவதிலேயே தனது கவனத்தைச் செலுத்துவது என்ன மாதிரியான புரட்சிகரமான ஆட்சி நிர்வாகம்? திரைப்படத்திற்கும், போதைக்கும் பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து வளர்ந்திருக்கிறது? இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா, முதலமைச்சர் அவர்களே? ஆகவே, புதிய திரைப்படங்களுக்கு அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதியளித்துள்ள முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்தப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in