CRIME
2 லட்சத்திற்கா..? “தாய் திட்டியதால் மாயமான 15 வயது சிறுமி” பேருந்து நிலையத்தில் மயக்க மருந்து கொடுத்து… கண்விழித்து பார்த்தபோது காத்திருந்த ஷாக்…!!
பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த ஜூலை 20-ஆம் தேதி திடீரென மாயமானார். வீட்டு வேலை தொடர்பாகத் தாயார் திட்டியதால் கோபமடைந்து வயல்வெளிப் பகுதிக்குச் சென்ற அந்தச் சிறுமியை, அதே கிராமத்தைச் சேர்ந்த பராஸ்மணி என்ற பெண் பேருந்து நிலையம் அருகிலுள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கலந்த உணவைக் கொடுத்துள்ளார். மயக்கமடைந்த சிறுமி மறுநாள் கண்விழித்துப் பார்த்தபோது, தான் ராஜஸ்தான் மாநிலத்தில் இருப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.
அங்கு மன்ஃபூல் கோதாரா (34) என்ற நபருக்கு ரூ.2 லட்சத்திற்குத் தான் விற்கப்பட்டு, கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார். மன்ஃபூல் வீட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த அந்தச் சிறுமி, கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி கிடைத்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தித் தனது தந்தைக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களைக் கூறியுள்ளார்.
சிறுமியின் தொலைபேசி எண்ணைக் கொண்டு பிகானேர் பகுதியில் இருப்பதைக் கண்டறிந்த பாகல்பூர் போலீசார், உள்ளூர் போலீசாரின் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தி சிறுமியைப் பத்திரமாக மீட்டதுடன் மன்ஃபூலையும் கைது செய்தனர். இதே பகுதியைச் சேர்ந்த மேலும் 3 முதல் 4 சிறுமிகளும் இதேபோல் ராஜஸ்தானில் திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
