LATEST NEWS
“இது என்ன நியாயம்..?” சாமானியனுக்கு ஒரு சட்டம்.. விஐபி-களுக்கு ஒரு சட்டமா..? கோயில் விதிகளை மீறிய விஐபி மகனால் கொதித்தெழுந்த மக்கள்..!!
உஜ்ஜைனில் உள்ள புகழ்பெற்ற மஹாகால் கோயிலில் சாதாரண பக்தர்களின் செல்போன்கள் நுழைவாயிலிலேயே பெறப்பட்டுவிடும் நிலையில், விஐபி நபர்களுக்கு விதிகள் காற்றில் பறக்கவிடப்படுவதாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு பாஜக எம்எல்ஏ கோலு சுக்லாவின் மகன் ருத்ராக்ஷ் சுக்லா, நீலகண்ட வாயில் வழியாக கோயிலுக்குள் நுழைந்து, இ-கார்ட் வாகனத்தில் பயணித்தபடியே கோயிலின் வெள்ளி வாயில் வரை மொபைல் போனில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்துள்ளார். பூஜை, அபிஷேகம் மற்றும் ஆரத்தி எடுக்கும் காட்சிகளையும் அவர் வீடியோவாகப் பதிவு செய்துள்ள நிலையில், அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரைத் தடுப்பதற்குப் பதிலாக உரிய மரியாதையுடன் தரிசனம் செய்ய உதவியுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகக் குழு விசாரணை நடத்தி, பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்ததுடன், 3 பாதுகாவலர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. ஆனால், விதிகளை மீறி வீடியோ எடுத்த எம்எல்ஏ மகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மேலதிகாரிகளின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டுப் பணியாற்றும் சாதாரண பாதுகாவலர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது உஜ்ஜைன் மக்களிடையே கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏற்கனவே 2021, 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளிலும் ருத்ராக்ஷ் சுக்லா கோயில் விதிகளை மீறி கருவறைக்குள் நுழைந்ததாகவும், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள மஹாமண்டலேஷ்வர் சைலேஷானந்த், வைஷ்ணவி தேவி கோயிலைப் போல மஹாகால் கோயிலின் உள் பாதுகாப்பையும் மத்திய அல்லது ஆயுதப்படை வீரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சாதாரண பக்தர்கள் செல்போன் கொண்டு சென்றால் தடுக்கப்பட்டு அவமதிக்கப்படும் நிலையில், அரசியல்வாதிகளுக்கும் செல்வாக்கு மிக்கவர்களுக்கும் மட்டும் உள்ளே சென்று ரீல்ஸ் எடுக்க அனுமதி அளிப்பது தவறு என்றும் அவர் சாடியுள்ளார். இறைவன் சன்னதியில் அனைவரும் சமம் என்ற நிலையில், சாமானியர்களுக்கு ஒரு சட்டமும் விஐபிக்களுக்கு ஒரு சட்டமும் எனப் பாரபட்சம் காட்டப்படுவதால், விதிகளை மீறுபவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
