LATEST NEWS
“என் நிலத்துல புதையல் இருக்கு…” ஆசையில் நள்ளிரவில் அரங்கேறிய வினோத பூஜை.. அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்..!!
மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா மாவட்டத்தில் உள்ள டாக்லே போக்ரி கிராமத்தில், தனது விவசாய நிலத்திற்குள் ஏழு தங்கக் குடங்கள் புதைந்திருப்பதாகச் சந்தேகித்த விவசாயி ஒருவர் நள்ளிரவில் ‘அகோரி பூஜை’ நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 11-ஆம் தேதி இரவு, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிவலால் தோண்டிராம் ரத்தோட் என்ற விவசாயி, தனது நிலத்தில் புதைந்திருப்பதாகக் கருதிய ஏழு தங்கக் குடங்களை வெளியே எடுப்பதற்காக அகில்யாநகர், சத்ரபதி சம்பாஜிநகர் மற்றும் ஜால்னா ஆகிய மாவட்டங்களிலிருந்து சிலரை வரவழைத்து இந்த ரகசிய பூஜையை நடத்தியுள்ளார்.
அப்போது இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பார்தூர் காவல்துறையினருக்கு இந்த அகோரி பூஜை குறித்து ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதுடன் புதர்களுக்குள்ளும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, நிலத்திலிருந்து தங்கக் குடங்களை எடுப்பதற்காக இந்தப் பூஜை நடத்தப்பட்டது தெரியவந்தது. அங்கிருந்து எலுமிச்சை, தேங்காய், பாக்கு, பாதாம், குங்குமப்பூ உள்ளிட்ட பூஜைப் பொருட்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நிலத்தின் உரிமையாளரான விவசாயி உட்பட மொத்தம் 9 பேரை பார்தூர் காவல்துறையினர் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர். பிடிபட்ட 9 பேர் மீதும் மகாராஷ்டிரா பில்லி சூனியம் மற்றும் மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
