LATEST NEWS
“இது பாசிசமா பாயாசமா..?” முதலமைச்சர் உடன் எடுத்த புகைப்படத்தை நீக்கிய மெட்டா… மு.க.ஸ்டாலின் எழுப்பிய அதிரடி கேள்வி.. தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு..!!
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழின் ஆசிரியர் அருண் ராம், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் செயல்பாடுகள் மற்றும் அதுகுறித்த முதலமைச்சரின் மௌனம் குறித்து விமர்சித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யுடன் அவர் சந்தித்த புகைப்படம் ‘சட்டத் தேவைகளுக்கு இணங்க’ மெட்டா நிறுவனத்தால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “இது பாசிசமா பாயாசமா?” என விமர்சித்துள்ளதோடு, தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவின் தலையீட்டால்தான் இது நிகழ்ந்ததா என்றும், விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறியவர்களால் ஊடகச் செய்திகளைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லையா என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தவெக அரசு மீது விமர்சனங்களை முன்வைக்கும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து இணையவழித் தாக்குதல்களுக்கு ஆளாவதாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் கவலை தெரிவித்துள்ளது. ஆந்திர முதலமைச்சரிடம் தொழில் முதலீடு குறித்துக் கேள்வி எழுப்பிய ‘தி வீக்’ இதழின் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் மற்றும் தவெக நிர்வாகிகள் குறித்து எழுதிய அருண் ராம் ஆகியோருக்கு எதிராக தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் வகையில் பதிவிட்டு வருவதாக அந்த மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர் பிரபாகரன் தமிழரசுவின் இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்க (Hack) முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உண்மையை எழுதுவதும் அதிகாரத்தை நோக்கிக் கேள்வி எழுப்புவதும் பத்திரிகையாளர்களின் கடமை என்றும், அவர்களை அச்சுறுத்துவதும் சமூக வலைதளப் பதிவுகளை நீக்குவதும் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எனவே, பத்திரிகையாளர்களுக்கு எதிரான இத்தகைய செயல்பாடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், தவெக தொண்டர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, அச்சுறுத்தலில் ஈடுபடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மன்றம் வலியுறுத்தியுள்ளது.
