LATEST NEWS
“மகள் என்பவள் மகள்தான்.. அரசு ஆவணங்களில் இனி ‘அந்த’ வார்த்தையே இருக்கக் கூடாது.. கேரள உயர் நீதிமன்றத்தின் நெகிழ்ச்சித் தீர்ப்பு.!!
வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்களில் ‘தத்தெடுக்கப்பட்ட மகன்’ அல்லது ‘தத்தெடுக்கப்பட்ட மகள்’ என்று முன்னொட்டுடன் குறிப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கேரள அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளது. திருச்சூரைச் சேர்ந்த ‘அன்மோல்’ என்ற பெண், 1990-ஆம் ஆண்டு பிறந்த ஒரு மாதத்திற்குள் தத்தெடுக்கப்பட்ட நிலையில், அவரது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, கல்விச் சான்றிதழ்கள் மற்றும் 2023-இல் தாயார் இறந்தபோது வழங்கப்பட்ட வாரிசு சான்றிதழ் ஆகிய அனைத்திலும் ‘மகள்’ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 2024 அக்டோபரில் தந்தை மறைந்த பிறகு திருச்சூர் வட்டாட்சியர் வழங்கிய வாரிசு சான்றிதழில் மட்டும் ‘தத்தெடுக்கப்பட்ட மகள்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்ததை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வி. குஞ்சிகிருஷ்ணன், “பிறப்பால் வந்தாலும் சரி, தத்தெடுப்பால் வந்தாலும் சரி, மகள் என்பவள் மகள்தான்; அவர்களைப் பெற்ற பிள்ளைகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்கு எந்தக் காரணமும் இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளை அடையாளம் காண இ-மாவட்ட இணையதளத்தில் தனிப் பிரிவு இருப்பதாக அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை நிராகரித்த நீதிபதி, அந்தத் தனிப் பிரிவை உடனடியாக நீக்கவும், வழிகாட்டுதல்களை மாற்றியமைக்கவும் கேரள அரசுக்கு உத்தரவிட்டார். அதோடு, மனுதாரருக்கு வழங்கப்பட்ட பழைய சான்றிதழை ரத்து செய்து, எந்த முன்னொட்டும் இல்லாமல் ‘மகள்’ என்று மட்டும் குறிப்பிட்டு புதிய வாரிசு சான்றிதழை வழங்குமாறு திருச்சூர் வட்டாட்சியருக்கும் அவர் ஆணையிட்டுள்ளார்.
