LATEST NEWS
சின்ன வயசுல முடி சாப்பிட்டா இப்படி ஆகுமா..? வயிற்று வலி போன 15 வயது சிறுமி… ஸ்கேனைப் பார்த்து ஷாக்கான டாக்டர்ஸ்..! உள்ளே இருந்த 750 கிராம், 1.2 மீட்டர் முடிக் கட்டியால் பேரதிர்ச்சி..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபூரில் மருத்துவர்கள் 15 வயது சிறுமிக்கு சிக்கலான அறுவை சிகிச்சை செய்து 750 கிராம் எடையுள்ள முடிக் கட்டியை அகற்றியுள்ளனர். அனந்தபூரின் ராயதுர்கத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமிக்குச் சிறு வயது முதலே சொந்த முடியைத் தானே சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக அவளது வயிற்றில் படிப்படியாக முடிகள் சேர்ந்து ஒரு பெரிய கட்டியாக உருவாகியுள்ளன. கடந்த சில நாட்களாகத் தீவிர வயிற்று வலி, வாந்தி மற்றும் தொடர் எடை இழப்பால் அவதிப்பட்ட சிறுமியைக் குடும்பத்தினர் அனந்தபூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடத்தப்பட்ட பல்வேறு பரிசோதனைகளில் வயிற்றில் அதிக அளவு முடி சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவர்கள் இது அரிதான ‘ராபுன்செல் சிண்ட்ரோம்’ (Rapunzel syndrome) பாதிப்பு எனத் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ மொழியில் முடி சாப்பிடும் பழக்கத்திற்கு ‘டிரைக்கோஃபேஜியா’ (Trichophagia) என்று பெயர். பொதுவாக வயிற்றுக்குள் செல்லும் முடிகள் செரிமானம் ஆவதில்லை; நீண்ட காலம் தொடர்ந்து முடி சாப்பிடும்போது அவை வயிற்றில் சேர்ந்து ‘டிரைக்கோபெசோஆர்’ (Trichobezoar) எனப்படும் பெரிய கட்டியாக மாறுகின்றன. வயிற்றில் சேர்ந்த இந்த முடிக் கட்டி குடல் வரை பரவும் நிலையை ‘ராபுன்செல் சிண்ட்ரோம்’ என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த அரிதான பாதிப்பில் வயிற்று வலி, வாந்தி, பசியின்மை மற்றும் எடை குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்; உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் நிலைமை தீவிரமாக வாய்ப்புள்ளது.
மருத்துவமனையின் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் ராமசாமி நாயக் தெரிவித்தபடி, செவ்வாய்க்கிழமை மருத்துவர் குழுவினர் லேப்ரோடமி (Laparotomy) மற்றும் கேஸ்ட்ரோடமி (Gastrotomy) செயல்முறைகள் மூலம் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து, சுமார் 1.2 மீட்டர் நீளமும் 750 கிராம் எடையும் கொண்ட முடிக் கட்டியை வெற்றிகரமாக அகற்றினர். தற்போது சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளது. குழந்தைகளிடம் முடி சாப்பிடும் பழக்கம் தெரிந்தால் அதைச் சாதாரணமாகக் கருதி அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும், குறிப்பாகத் தொடர் வயிற்று வலி, வாந்தி, பசியின்மை அல்லது எடை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
