LATEST NEWS
“அமைச்சரா இருந்தாலும் சட்டம் ஒண்ணுதான்” புலியைத் துரத்திய வீடியோவால் சிக்கலில் அமைச்சர் வன்னி அரசு… கர்நாடக வனத்துறை அதிரடி..!!
வனப்பகுதிக்குள் விதிகளை மீறி புலியை வாகனத்தில் துரத்தியதாக எழுந்த சர்ச்சையில், தமிழக அமைச்சர் வன்னி அரசு மீது விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. முதுமலை மற்றும் கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகப் பகுதியில் காட்டு யானையை நெருங்கிச் சென்றதுடன், புலியை வாகனத்தில் துரத்துவது போன்ற காணொளியை அமைச்சர் வெளியிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, அந்த வீடியோவில் வாகனத்தின் பதிவு எண் தெளிவாகத் தெரிவதாகவும், வனவிலங்கு பாதுகாப்பு விதிமீறல் நடந்துள்ளதா என விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், “அமைச்சராக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி, பதவியைப் பொருட்படுத்தாமல் அனைவரும் வனத்துறை விதிகளைப் பின்பற்ற வேண்டும்” என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
முன்னதாக, சாமான்ய மக்களுக்கு ஒரு சட்டம், அமைச்சர்களுக்குத் தனிச் சட்டமா என நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் வன்னி அரசின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்துள்ள அமைச்சர் வன்னி அரசு, தான் முறையான அனுமதி பெற்றே காப்பகத்திற்குச் சென்றதாகவும், புலியை நேரில் பார்த்த ஆர்வமிகுதியால் நன்றாகப் பார்ப்பதற்காகச் சென்றேனே தவிர, அதனை விரட்டவில்லை என்றும் கூறியுள்ளார்.
