LATEST NEWS
“அமேசான் காடுகளுக்குள் நடப்பது என்ன..?” உணவுக்காக மனிதர்களைத் தேடி வெளியே வந்த 20 பழங்குடியினர்.. உலகையே உலுக்கிய சம்பவம்..!!
தென் அமெரிக்காவில் பரந்து விரிந்துள்ள உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசான் காடுகளில், ஏராளமான அரிய வகை உயிரினங்கள் மட்டுமின்றி, வெளி உலகத்துடன் எவ்விதத் தொடர்புமின்றிப் பல தலைமுறைகளாகக் காட்டையே தங்களது வாழ்விடமாகக் கொண்ட பழங்குடியின மக்களும் வசித்து வருகின்றனர். வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மற்றும் காடுகளில் இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருட்களைச் சேகரித்தல் ஆகியவற்றை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு இவர்கள் தனித்துவமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 16-ஆம் தேதி பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மரன்ஹாவோ மாநிலத்தின் அரரிபோயா வனப்பகுதியில் பல ஆண்டுகளாகக் காட்டிற்குள்ளேயே தனித்து வாழ்ந்து வந்த சுமார் 20 ‘அவா’ பழங்குடியின மக்கள், திடீரெனத் தங்களது காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறி அருகிலுள்ள குவாஜாஜாரா கிராமத்தை அடைந்துள்ளனர். அங்கிருந்த அரசு கண்காணிப்புக் குழுவினரைச் சந்தித்த அவர்கள் உணவுப் பொருட்களைக் கேட்டதாகவும், பின்னர் கிழங்கு வகை உணவுகளைப் பெற்றுக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது; இதுதொடர்பான அரிய வீடியோ காட்சிகளை உள்ளூர் மக்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
காட்டுக்குள்ளேயே தங்களுக்குத் தேவையான உணவுகளைத் தேடி சுதந்திரமாக வாழ்ந்து வந்த பழங்குடியின மக்கள், தற்போது ஏன் வெளியே வந்து உணவு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்ற கேள்வி சர்வதேச அளவில் பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பிரேசில் நாட்டின் பழங்குடியின விவகாரங்களுக்கான அரசு அமைப்பான FUNAI தீவிரமாகக் கண்காணித்து வரும் நிலையில், பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ‘சர்வைவல் இன்டர்நேஷனல்’ அமைப்பின் இயக்குநர் கரோலின் பியர்ஸ் இது குறித்து முக்கியக் கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில், ‘அவா’ பழங்குடியின மக்கள் தங்களது வாழ்விடத்தின் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் சட்டவிரோத ஊடுருவல்காரர்களால் சூழப்பட்டு வருவதாகவும், இதனால் அவர்கள் வாழும் காடுகளின் பரப்பளவு தொடர்ந்து சுருங்கி வருவதே இந்த வெளியேற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
ஒருபுறம், அமேசான் மழைக்காடுகளைப் பாதுகாப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளைப் பற்றிப் பேசி வருகின்றன. ஆனால் மறுபுறம், அதே காடுகளையே தங்களது வீடாகவும், உணவு கிடைக்கும் இடமாகவும், வாழ்வாதாரமாகவும் கொண்ட பூர்வீகப் பழங்குடியின மக்கள், வெளிநபர்களின் அத்துமீறல்களால் தங்களது வாழ்விடங்களை இழந்து உணவுக்காகக் காட்டை விட்டு வெளியேறும் அபாயத்தைச் சந்தித்து வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
