CRIME
“காரில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி..” மோப்பம் பிடித்து வந்த மற்றொரு காதலன்.. அடுத்தடுத்து விழுந்த அரிவாள் வெட்டு.. திருப்பத்தூரை அதிரவைத்த பகீர் சம்பவம்..!!
திருப்பத்தூர் மாவட்டம், தோரணம்பதி அருகே உள்ள காலி பிளாட்டில் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஆண், பெண் இருவரும் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டி ஒருவர், நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த காரின் அருகே இருவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார், உயிரிழந்தவர்கள் திப்பசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மாலினி (30) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் பாச்சல் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (28) என்பதை அடையாளம் கண்டு, உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், மாலினிக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தனது பள்ளிப்பருவக் காதலரான சஞ்சீவி காந்தி என்பவருடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மாலினிக்கு அவரது உறவினரான ரஞ்சித் என்பவருடனும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் மாலினிக்கும் சஞ்சீவி காந்திக்கும் இடையே செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரைச் சந்திப்பதற்காக சஞ்சீவி காந்தி திருப்பத்தூர் வந்துள்ளார். அப்போது ரஞ்சித்தும் மாலினியும் தனிமையில் பேசுவதற்காக காரில் சென்றதை அறிந்த சஞ்சீவி காந்தி, இருசக்கர வாகனத்தில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
திருப்பத்தூர் – சேலம் சாலையில் தோரணம்பதி அருகே உள்ள காலி பிளாட்டில் கார் நின்றிருந்தபோது, அங்கு சென்ற சஞ்சீவி காந்தி மாலினியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தடுக்க முயன்ற ரஞ்சித்துக்கும் சஞ்சீவி காந்திக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சஞ்சீவி காந்தி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரஞ்சித் மற்றும் மாலினி ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்தக் கொடூரத் தாக்குதலில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இரட்டைக் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த சஞ்சீவி காந்தியைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் தற்போது அவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சஞ்சீவி காந்தி தவெக கட்சியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் நிலையில், அவரை திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது திடீர் ஆத்திரத்தில் நிகழ்ந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
