CRIME
. “நாங்க யார் தெரியுமா..?” பகல்ல டீசன்ட்டா வேலை.. நைட் ஆனா போலி அதிகாரி வேஷம்..! ரயிலில் 2 கிலோ தங்கத்தை ஆட்டைய போட்ட மேனேஜர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த வியாபாரி சஞ்சீவ் கண்டேல்வாலிடம் இருந்து சுமார் 2 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், பரேலியின் பாராதரி காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த ராகுல் மௌரியா என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் ஒரு மருந்து நிறுவனத்தில் ஏரியா மேனேஜராகப் பணிபுரிந்து வரும் நிலையில், தன்னுடைய நான்கு கூட்டாளிகளுடன் சேர்ந்து வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் அதிகாரிகள் போல ரயிலில் ஏறி, அதிகாரத் தோரணையைக் காட்டி தங்கத்தைக் கைப்பற்றி தப்பியோடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் பீகாரின் பபுவா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விசாரணையில் இந்தக் கும்பலின் தொடர்பு பரேலியுடன் இருப்பது தெரியவந்ததை அடுத்து, ராகுல் மௌரியா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விவரங்களை எஸ்.பி. சவுத் அன்ஷிகா வர்மா வெளியிட்டார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 880 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொள்ளை மற்றும் சட்டவிரோத வருமானத்தின் மூலம் ராகுல் மௌரியா பரேலியில் பல வீடுகளைக் கட்டியிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளைப் பணம் எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய அவரின் சொத்து விவரங்களைக் காவல்துறையினர் திரட்டி வருகின்றனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ராகுலைத் தவிர மேலும் நான்கு குற்றவாளிகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களைப் பிடிக்கக் காவல்துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், இந்தக் கும்பல் இதற்கு முன்பு எத்தனை குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டது மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட மீதமுள்ள தங்கம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மருந்து நிறுவன ஏரியா மேனேஜரான ராகுலின் கைதுக்குப் பிறகு, இந்தக் கும்பலின் முழு வலையமைப்பு மற்றும் சொத்துகள் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
