LATEST NEWS
“5 ஆண்டுகள் வாரண்டி, IS தரப் பாகங்கள் கட்டாயம்” மாணவர்களுக்கான நவீன சைக்கிள் திட்டத்தில் ஹீரோ நிறுவனத்திற்குத் தமிழக அரசு அதிரடி நிபந்தனைகள்..!!
தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நவீன சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், சைக்கிள்களைத் தயாரித்து வழங்கவுள்ள ஹீரோ நிறுவனத்திற்குத் தமிழக அரசு கடுமையான தர நிபந்தனைகளை விதித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சைக்கிள்களின் பிரேம், போர்க் மற்றும் ஹேண்டில் பாருக்கு 5 ஆண்டுகள் வாரண்டியும், அதனுடன் வழங்கப்படும் ஹெல்மெட்டுக்கு 1 ஆண்டு வாரண்டியும் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மாணவர்களுக்கான சைக்கிளில் 26 x 2.125 என்ற அளவிலும், மாணவிகளுக்கான சைக்கிளில் 26 x 1.95 என்ற அளவிலும் டயர்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சைக்கிளின் அனைத்துப் பாகங்களும் இந்தியத் தர நிர்ணய அமைப்பின் (IS) தரத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் எனவும், பாதுகாப்பிற்காக 2 காலிபர் பிரேக்குகள் பொருத்தப்பட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சைக்கிளின் பிரேம் உறுதியாக இருக்கும் வகையில் ERW ஸ்டீல் டியூப்களால் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் ஹீரோ நிறுவனத்திற்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
