CRIME
“இது என்ன நியாயம் சார்…?”₹90,000 லஞ்சம் வாங்கி ஆதாரத்துடன் சிக்கிய இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் முக்கியப் பதவியா..? கொந்தளிக்கும் மக்கள்..!!
உத்திரபிரதேசம் மஹோபா மாவட்டத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் ஷியாம் பிரதாப் படேல் கடந்த காலங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு லாரிகளிடம் இருந்து சட்டவிரோதமாகப் பணம் வசூலித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக, அவர் லாரிகளிடம் இருந்து சுமார் ரூ.90,000 வரை லஞ்சமாகப் பெற்றதற்கான ஆதாரங்களும், பணப் பரிமாற்றம் தொடர்பான ஸ்கிரீன்ஷாட்களும் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலானது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், காவல்துறை உயரதிகாரிகள் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரைப் பணியிடை நீக்கம் செய்திருந்தனர்.
லஞ்சப் புகாரில் சிக்கிப் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஷியாம் பிரதாப் படேலுக்கு, தற்போது மஹோபாகாத்காவல் நிலையத்தின் பொறுப்பாளராக மீண்டும் முக்கியப் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, ஆதாரங்களுடன் பிடிபட்ட ஒரு அதிகாரியைத் தண்டிப்பதற்குப் பதிலாக, மீண்டும் ஒரு காவல் நிலையத்திற்கே தலைவராக நியமித்திருப்பது காவல்துறையின் நம்பகத்தன்மை குறித்துப் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
காவல்துறையின் இந்த நடவடிக்கைக்குப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கே மீண்டும் முக்கியப் பொறுப்பு வழங்குவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும், இது ஊழலை ஊக்குவிப்பதற்குச் சமம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், காவல்துறை உயரதிகாரிகள் இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
