CRIME
உஷார்.. வாட்ஸ்அப்பில் வரும் இந்த லிங்கை மட்டும் தொட்டுடாதீங்க.. திருமண அழைப்பிதழ் வடிவில் வந்த சைபர் வலை… கண் இமைக்கும் நேரத்தில் ரூ.10.02 லட்சம் கொள்ளை..! பகீர் பின்னணி..!!
வாட்ஸ்அப்பில் வந்த திருமண அழைப்பிதழை உண்மையானது என நம்பிப் பதிவிறக்கம் செய்த குஜராத்தின் சூரத் பகுதியைச் சேர்ந்த நபர், சுமார் ரூ.10.02 லட்சத்தை இழந்துள்ளார். அதனுடன் வந்த ‘wedding invitation.APK’ என்ற கோப்பை அவர் டவுன்லோட் செய்தபோது, அவரது செல்போன் சைபர் குற்றவாளிகளின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுள்ளது. இதனைப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10.02 லட்சத்தைத் திருடியுள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்திய சூரத் சைபர் கிரைம் போலீசார், உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூரைச் சேர்ந்த 28 வயதான தேவேந்திர மாலிக் என்பவரைக் கைது செய்துள்ளனர். சைபர் குற்றவாளிகளுக்குத் தனது வங்கிக் கணக்கைப் பயன்படுத்த அனுமதித்து மோசடிப் பணத்தைப் பெற்றுக் கொடுத்ததாகவும், அதில் 20 சதவீதத்தைக் கமிஷனாக வைத்துக்கொண்டு மீதியை கூட்டாளிகளிடம் ஒப்படைத்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வாட்ஸ்அப்பில் வரும் தெரியாத APK கோப்புகள் மற்றும் சந்தேகத்திற்குரிய திருமண அழைப்பிதழ் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யவோ திறக்கவோ வேண்டாம் எனப் பொதுமக்களுக்குப் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பண மோசடி நடந்தால் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும், ஒரு சிறிய கவனக்குறைவு வங்கிக் கணக்கையே காலி செய்துவிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
