CRIME
“என் காதலியைக் கொன்றுவிட்டேன்..” லாட்ஜ் ஊழியர்களுக்கு காதலன் கொடுத்த தகவல்.. போலீஸை அதிரவைத்த பகீர் சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், கேரளாவைச் சேர்ந்த 22 வயது செவிலியர் பட்டதாரிப் பெண், தனது காதலனாலேயே தனியார் விடுதி அறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு காட்டன்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓடிசி சாலையில் உள்ள தவக்கல் மஸ்தான் தர்கா அருகே அமைந்துள்ள ‘ரீஜென்சி லாட்ஜ்’ விடுதியில் இன்று காலை சுமார் 11 மணியளவில் இந்தக் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்தவர் கேரள மாநிலம் அடூர் பகுதியைச் சேர்ந்த கங்கா (22) என்பதும், செவிலியர் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலை தொடர்பாகக் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான கோகுல் கிருஷ்ணா என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பி.எஸ்சி நர்சிங் முடித்துவிட்டு, செவிலியர் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்குக் கல்லூரி சேர்க்கை ஆலோசகராகப் பணியாற்றி வந்த கோகுல் கிருஷ்ணாவும், கங்காவும் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார். வேலை தேடுவதற்காகப் பெங்களூரு வந்திருந்த இருவரும் அந்த விடுதியில் தங்கியிருந்த நிலையில், இன்று காலை சுமார் 10 மணியளவில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கோகுல் கிருஷ்ணா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கங்காவைக் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்திற்கு முன்பாகவே கோகுல் கிருஷ்ணா அந்தக் கத்தியை வாங்கி வைத்திருந்ததாகக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கொலைக்குப் பிறகு கோகுல் கிருஷ்ணாவே விடுதி ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்டன்பேட்டை காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி, கோகுல் கிருஷ்ணாவைக் கைது செய்து கொலைக்கான துல்லியமான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
