LATEST NEWS
“ரத்து இல்ல… வேற லெவல் பிளான்..! செம்மஞ்சேரி ஸ்போர்ட்ஸ் சிட்டி என்னாச்சு…?” உதயநிதி கேள்விக்கு சட்டசபையில் மாஸ் அப்டேட் கொடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா..!!
தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் செம்மஞ்சேரியில் 128 ஏக்கர் பரப்பளவில் ரூ.261 கோடி மதிப்பீட்டில் குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதைப் போலவே, குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் ஏன் கைவிடப்பட்டது என்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தனக்கு இருந்த விளையாட்டுத் துறை அனுபவத்தின் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்தபோது, செம்மஞ்சேரி ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை என்றும், மாறாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்தார். ஒரு ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட்டால் அது ஒலிம்பிக் தரத்தில் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனக் கூறிய அமைச்சர், 42 வகையான விளையாட்டுகளை சர்வதேச தரத்தில் நடத்தும் வகையில் புதிய டிபிஆர் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த புதிய திட்டம் முதலமைச்சரின் ஆய்வில் இருப்பதாகவும், கூடிய விரைவில் நல்ல செய்தியை முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிடப்படவில்லை என்றும் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, 1994ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்குப் பிறகு சர்வதேச தரத்தில் புதிய விளையாட்டு அரங்கம் உருவாக்கப்படவில்லை என்றும், முதலமைச்சர் புதிய அறிவிப்பை வெளியிட்டதும் கூடிய விரைவில் பணிகளைத் தொடங்கி, ஐந்து ஆண்டுகளுக்குள் முழுமையாக முடித்து, முதலமைச்சர் அவர்களின் கைகளால் ஒலிம்பிக் தரத்திலான இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டி திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
