திமுக கஷ்டப்பட்டு மீட்ட ரூ.2,000 கோடி நிலம்… கட்டவிருந்த ‘ஸ்போர்ட்ஸ் சிட்டி’ திட்டத்தை அதிரடியாக ரத்து செய்த CM விஜய். பின்னணியில் என்ன நடந்தது..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

திமுக கஷ்டப்பட்டு மீட்ட ரூ.2,000 கோடி நிலம்… கட்டவிருந்த ‘ஸ்போர்ட்ஸ் சிட்டி’ திட்டத்தை அதிரடியாக ரத்து செய்த CM விஜய். பின்னணியில் என்ன நடந்தது..?

Published

on

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR) உள்ள செம்மஞ்சேரியில், பல ஆண்டு போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்ட சுமார் ₹2,000 கோடி மதிப்பிலான அரசு நிலத்தில் அமையவிருந்த “சென்னை சர்வதேச விளையாட்டு நகரம்” திட்டத்தின் கட்டுமான ஒப்பந்தத்தை தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு திடீரென ரத்து செய்துள்ளது. முன்னதாக, 1990-கள் முதல் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் ஆக்கிரமிப்பில் இருந்த 91.4 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை, 20 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 2021-ல் திமுக அரசு அதிரடியாக மீட்டு, அதை 112 ஏக்கர் நிலப்பரப்பாக விரிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

மீட்கப்பட்ட அந்தப் பரந்த நிலத்தில் ஒலிம்பிக் தரத்திலான சர்வதேச விளையாட்டு வளாகத்தை உருவாக்க திமுக அரசு திட்டமிட்டிருந்தது. இந்தியாவில் முதன்முறையாக 1 கிலோமீட்டர் நீளமுள்ள நீர் விளையாட்டுத் தடம், நவீன உள்விளையாட்டு அரங்கங்கள் மற்றும் மெட்ரோ ரயில் இணைப்பு வசதிகளுடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. இதற்காக முதற்கட்டமாக ₹205.89 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகளைச் மேற்கொள்ள ஆர்.பி.பி இன்ப்ரா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ஆரம்பகட்ட மண் பரிசோதனைப் பணிகளும் தொடங்கப்பட்டிருந்தன.

Advertisement

இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்ற தவெக அரசு முந்தைய ஆட்சியின் பெருந்திட்டங்கள் குறித்து நடத்திய மறுஆய்வுக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. தற்போதுள்ள திட்ட வடிவமைப்பு, எதிர்காலத்தில் ஆசிய அல்லது காமன்வெல்த் விளையாட்டுகளை நடத்தும் அளவிற்குப் போதுமானதாக இருக்காது எனக் கருதப்பட்டது. 112 ஏக்கர் நிலத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி, மேலும் பிரம்மாண்டமான ஒருங்கிணைந்த சர்வதேச விளையாட்டு மையமாக மாற்றி அமைக்கும் நோக்கிலேயே, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் இந்த ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

இந்தத் திடீர் ரத்து நடவடிக்கையால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்புகள் மற்றும் ஒப்பந்த விதிகளின்படியான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்துப் பரிசீலித்து வருவதாக ஆர்.பி.பி இன்ப்ரா நிறுவனம் பங்குச் சந்தைக்குத் தெரிவித்துள்ளது. அதேவேளையில், மெகா சர்வதேசப் போட்டிகளுக்கு ஏற்றவாறு புதிய திட்ட அறிக்கை விரைவாகத் தயாரிக்கப்பட்டு, உலகத் தரத்திலான புதிய வடிவமைப்புடன் விரைவில் மறு டெண்டர் கோரப்படும் என அரசுத் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in