LATEST NEWS
நேபாள பயணத்தில் சோகம்…! 30 ஆண்டு அனுபவமிக்க மலையேற்ற டாக்டர் மனைவியுடன் மாயம்… எவரெஸ்ட் சிகரம் தொட்ட மருத்துவர் நலமுடன் மீள மக்கள் தீவிர பிரார்த்தனை..!!
நேபாளம் – திபெத் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவு மற்றும் பயங்கர வெள்ளப்பெருக்கில் பலர் சிக்கியுள்ளனர். இதில் மும்பை அந்தேரி கிழக்கில் உள்ள மால்பா டொங்ரி பகுதியைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் அவருடைய மனைவியும் மாயமாகியுள்ளனர். இவர்கள் யாத்திரைக்காக கடந்த 23-ஆம் தேதி 61 பேர் கொண்ட குழுவை நேபாளத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தகவலை அறிந்து அப்பகுதி மக்களும் நோயாளிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த மலையேற்ற வீரரும், தீவிர மிதிவண்டி பயண ஆர்வலருமாவார். 2005-ஆம் ஆண்டு புகழ்பெற்ற ‘கிரிமித்ரா’ விருதைப் பெற்ற இவர், ‘ஹில்ஸ் அண்ட் டிரெயில்ஸ்’ என்ற சாகச விளையாட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். மேலும் 8,000 மீட்டருக்கு மேல் உள்ள சிகரத்திற்குச் சென்ற நாட்டின் முதல் இந்தியக் குடிமக்கள் மலையேற்றக் குழுவின் டாக்டராகவும் செயல்பட்டுள்ளார். 23,000 அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட கஞ்சன்ஜங்கா சிகரத்தை வெற்றிகரமாக அடைந்துள்ள இவர், 1983-இல் மும்பை கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர்.
1997-ஆம் ஆண்டின் எவரெஸ்ட் மலையேற்றக் குழுவின் ஏற்பாட்டுக் குழு உறுப்பினராக இருந்த இவர், இமயமலைப் பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட நடைப்பயணங்களை மேற்கொண்டுள்ளார். மும்பையிலிருந்து கோவா வரையிலும், கன்னியாகுமரி வரையிலும் மிதிவண்டியிலேயே பயணம் செய்துள்ளார். இமயமலைக் கழகத்தின் உறுப்பினராகவும், அந்தேரி விளையாட்டு மன்றத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்த இவர், எப்போதும் சமூகத்திற்கு உதவும் நல் எண்ணம் கொண்டவர். அப்பகுதி மக்களுக்குச் சிறந்த முறையில் மருத்துவச் சேவை வழங்கி வந்த இந்தத் தம்பதியினர் பாதுகாப்பாகவும் நலமாகவும் வீடு திரும்ப வேண்டும் என்று பொதுமக்கள் தீவிரமாகப் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
