CRIME
சென்னையில் பயங்கரம்..! விசிக பிரமுகர் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டிக்கொலை.. 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆட்டோவில் வந்து குரூரம்..!!
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் அன்பழகன் (மைனாக்குட்டி), மர்ம நபர்களால் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பாக அவர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
அப்போது ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த சுமார் 10 பேர் கொண்ட மர்ம கும்பல், அன்பழகனைச் சூழ்ந்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்ட பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். எனினும், அங்கு வந்த மருத்துவக் குழுவினர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.
ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அன்பழகன் மீது ஏற்கனவே மூன்று கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய பகை மற்றும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில், தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
