LATEST NEWS
“மேடம்.. லேட்டா வந்ததுக்கு ரொம்ப நன்றி..!” கூகுள் அனந்தா கேம்பஸ் தந்த ஆச்சரியத்தால் கோபப்படாமல் சிரித்த பெங்களூரு டிரைவர்..! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சிப் பதிவு..!!
பொதுவாகக் கேப் டிரைவரை 10 நிமிடங்கள் காத்திருக்க வைத்தாலே பயணம் ரத்து செய்யப்படும் அல்லது டிரைவர் கோபப்படுவார். ஆனால், பெங்களூருவில் ஒரு கேப் டிரைவர், அவரை அழைத்த பயணி முழுதாக 1 மணி நேரம் தாமதமாக வந்தபோதிலும் கோபப்படாமல், “மேடம், தாமதமாக வந்ததற்கு ரொம்ப நன்றி!” என்று புன்னகையுடன் கூறியுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த எழுத்தாளரும் பயிற்சியாளருமான தான்யா மாதூர் பட்டாச்சார்யா, கூகுளின் புதிய ‘அனந்தா’ கேம்பஸில் நடந்த இந்தச் சம்பவத்தை தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கூகுள் அலுவலகத்தில் நடந்த பயிற்சிப் பட்டறையில் பங்கேற்கச் சென்ற தான்யா, காலை 11:30 மணிக்குத் தன் டிரைவர் சரத்தை வரச் சொல்லியிருந்தார். ஆனால், கூட்டங்கள் மற்றும் மதிய உணவால் அவர் வர மதியம் 12:30 மணி ஆகிவிட்டது; தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டபோதுதான், டிரைவர் சரத்தின் இந்த ஆச்சரியமான பதில் கிடைத்தது.
தான்யா ஆச்சரியத்துடன் இதற்கான காரணத்தைக் கேட்டபோது, கூகுள் அலுவலகத்தின் பேஸ்மெண்டில் டிரைவர்களுக்குச் செய்யப்படும் வசதிகளைப் பற்றி சரத் விவரித்தார். கூகுள் ‘அனந்தா’ வளாகத்தில் கேப் டிரைவர்களுக்காகத் தனி பார்க்கிங் வசதியுடன், இலவசமாகத் தேநீர், காபி மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, நாளொன்றுக்கு 3 வேளையும் இலவசமாகச் சிறப்பான உணவு வழங்கப்படுகிறது. “உணவை வீணாக்காதீர்கள், உங்களால் எவ்வளவு சாப்பிட முடியுமோ அவ்வளவு மட்டும் எடுங்கள்; ஆனால் எத்தனை முறை வேண்டுமானாலும் மீண்டும் எடுத்துச் சாப்பிடலாம்” என்று அங்கு கூறுவதாகச் சரத் தெரிவித்தார். மற்ற நிறுவனங்கள் டிரைவர்களுக்கு வெளியில் சாப்பிடப் பணம் தருகின்றன, ஆனால் கூகுள் எங்களை ‘விருந்தினர்களைப் போல’ நடத்துகிறது என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
டிரைவர் சரத்தின் இந்த வார்த்தைகள் தான்யாவுக்கு ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்தன. “எந்தவொரு பெரிய நிறுவனத்தின் குளிரூட்டப்பட்ட ஆடம்பர அலுவலகத்தைப் பார்த்துப் பாராட்டுவது எளிது. ஆனால், ஒரு நிறுவனத்தின் உண்மையான கலாச்சாரம் என்பது, நேரடியாகத் தங்கள் ஊழியர்களாக இல்லாத கேப் டிரைவர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்றவர்களிடம் அது எப்படி நடக்கிறது என்பதில்தான் உள்ளது” என்று தான்யா பதிவிட்டார். இந்த லிங்க்ட்இன் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஆயிரக்கணக்கானோரின் வரவேற்பைப் பெற்றுள்ளது. நிறுவனத்தின் பெரிய கொள்கைப் பிரகடனங்களை விட, அடித்தட்டு ஊழியர்களிடம் காட்டும் இந்த மனிதநேயமும் மரியாதையுமே உண்மையான நிறுவனக் கலாச்சாரத்திற்குச் சான்று என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
