LATEST NEWS
“பெற்றோர்களே உஷார்..! உங்க குழந்தைகளோட போட்டோவை ஃபேஸ்புக்ல போடுறீங்களா..? மெட்டா ஏஐ செய்யும் இந்த பயங்கர வேலையை முதல்ல தெரிஞ்சுக்கோங்க…” வைரலாகும் பரபரப்பு சம்பவம்..!!
அமெரிக்காவைச் சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டரும் தாயுமான கேலி ராபின்ஸ், மெட்டா ஏஐ தொழில்நுட்பம் தனது குழந்தைகளின் சமூக ஊடகத் தரவுகளை இணைத்து வெளிப்படுத்திய சம்பவம் குறித்து அதிர்ச்சி மற்றும் தனியுரிமை கவலையை எழுப்பியுள்ளார். கேலி ராபின்ஸ் தனது மகளுடன் காரில் பாட்டுப் பாடுவது போன்ற வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியபோது, அந்தப் பதிவின் கீழே மெட்டா ஏஐ “அந்தக் குழந்தை பயணி யார்?” என்ற கேள்வியைப் பரிந்துரைத்துள்ளது. இதைக் கிளிக் செய்து பார்த்தபோது, அவரது குழந்தைகளின் பெயர்கள், பிறந்த விவரங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்ற பல தகவல்கள் இணைக்கப்பட்டுக் காட்டப்பட்டுள்ளன. இதில் பல ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாய் பதிவிட்ட குழந்தையின் பழைய புகைப்படமும், கேலி தனது கணக்கிலிருந்து ஏற்கனவே நீக்கிவிட்டதாகக் கருதிய ஒரு புகைப்படமும் அடங்கும்.
மேலும், “கேலி ராபின்ஸ் எங்கு வசிக்கிறார்?” போன்ற பிற கேள்விகளை மெட்டா ஏஐ பரிந்துரைத்தபோது, அதைத் தொடர்ந்து பார்த்ததில் அவர் முன்பு வசித்த இடங்கள் மற்றும் தற்போதைய விவரங்கள் ஆகியவை இணைக்கப்பட்டு உருவானது தெரியவந்தது. அந்த வீடியோவில் இருப்பிடம் குறித்த எந்தத் தகவலும் இல்லாதபோதிலும், ஏஐ எவ்வாறு பழைய மற்றும் புதிய தரவுகளைத் திரட்டியது என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார். “பல ஆண்டுகளாக நாம் தனித்தனியாகப் பகிரும் அப்பாவித்தனமான குடும்பப் பதிவுகளை, ஏஐ சில நொடிகளில் ஒன்றுதிரட்டி நமது மைனர் குழந்தைகளின் முழு விவரங்களாக மாற்றிவிடும் என்பதை நான் முன்பு உணரவில்லை; இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/reel/Dcy8LU3S7DF/?utm_source=ig_web_button_share_sheet
இந்தச் சம்பவம் சமூக வலைதளப் பயனர்களிடையே பெரும் விவாதத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன்பின்னர், தனது குழந்தைகளின் அடையாளத்தைக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களிலிருந்து நீக்கத் திட்டமிட்டுள்ள கேலி ராபின்ஸ், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் தங்கள் பக்கங்களில் உள்ள தனது குழந்தைகளின் படங்களை நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நாம் நமது பக்கத்திலிருந்து படங்களை நீக்கினாலும், உறவினர்கள் பக்கத்தில் இருந்தால் ஏஐ அதைச் சென்றடைகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தச் சம்பவம், செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் குழந்தைகள் தொடர்பான உள்ளடக்கங்களைக் கையாளும்போது என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்ற விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.
