LATEST NEWS
ரூ.379 உணவுக்கு ரூ.744 டெலிவரி கட்டணம்… “உணவை என்ன பிசினஸ் கிளாஸ் விமானத்திலா கொண்டு வர்றீங்க..?” இணையத்தை அலறவிட்ட உணவு செயலியின் வைரல் பில்..!!
ஆன்லைன் உணவு டெலிவரி செயலியில் உணவின் விலையை விட டெலிவரி கட்டணம் அதிகமாக விதிக்கப்பட்டதாக வெளியான ஒரு ஸ்கிரீன்ஷாட், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் பயனர்களின் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. X தளத்தில் @Rudra_pvt_ என்ற பயனர் பகிர்ந்துள்ள அந்த ஸ்கிரீன்ஷாட்டில், அவர் தேர்வு செய்த உணவின் விலை ரூ.379 மட்டுமே. ஆனால் இறுதி கட்டணப் பட்டியலில், உணவக பேக்கிங் கட்டணம் ரூ.19, தளக் கட்டணம் ரூ.14.90, ஜிஎஸ்டி ரூ.149.50 மற்றும் அதிர்ச்சியளிக்கும் வகையில் டெலிவரி கட்டணமாக ரூ.744 சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த பில் தொகை ரூ.1,306.40 ஆக உயர்ந்தது; தள்ளுபடி கூப்பனைப் பயன்படுத்திய பிறகும் கூட அவர் ரூ.1,166 செலுத்த வேண்டியிருந்தது.
இந்த பிரம்மாண்ட கட்டணப் பட்டியலைச் பகிர்ந்த பயனர், “என்ன உணவை விமானத்திலா டெலிவரி செய்வார்கள்?” என்று நக்கலாகக் கேள்வி எழுப்பியிருந்தார். இப்போஸ்ட் இணையத்தில் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, உணவு டெலிவரி நிறுவனங்களின் இத்தகைய கூடுதல் கட்டண வசூலுக்கு எதிராக மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர். “இவ்வளவு பணத்தில் ஒருவர் நேரடியாக உணவகத்திற்குச் சென்று விஐபி உணவையே சாப்பிட்டு வந்துவிடலாம்” என்று ஒரு பயனர் கலாய்த்துள்ளார். மேலும் சிலர், சாதாரண மக்களின் பாக்கெட்டைக் காலி செய்யும் இதுபோன்ற கூடுதல் கட்டணங்களுக்கு உடனடி வரம்பு அல்லது கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
அதேவேளையில், ரூ.379 மதிப்புள்ள உணவுக்கு ரூ.744 டெலிவரி கட்டணமும், சுமார் ரூ.150 ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டிருப்பது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஏதேனும் மென்பொருள் தொழில்நுட்பக் கோளாறாகவோ, எடிட் செய்யப்பட்ட புகைப்படமாகவோ அல்லது AI மூலம் உருவாக்கப்பட்ட போலி ஸ்கிரீன்ஷாட்டாகவோ இருக்கலாம் என்றும் சில பயனர்கள் கருதுகின்றனர். எவ்வாறாயினும், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இப்போஸ்ட், ஆன்லைன் உணவு விநியோக தளங்களின் வெளிப்படைத்தன்மை குறித்த பெரும் விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.
