LATEST NEWS
“ஒரு கையில ஆட்டோ ஸ்டீயரிங், மறு கையில அரசு ஆசிரியர் படிப்பு…” என் வழியை வறுமை அடைக்க முடியாது..! மெய்சிலிர்க்க வைத்த ஆட்டோ டிரைவரின் வைரல் வீடியோ..!!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவின் பிஸியான வீதிகளில், அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திற்கு நடுவே தன் அரசு ஆசிரியர் கனவை நோக்கியும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சாமான்ய ஆட்டோ டிரைவரின் கதை தற்போது சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்று வருகிறது. லக்னோவில் ஆட்டோவில் பயணித்த மல்லிகா அகர்வால் ரூபானி என்ற பிரபல இன்ஸ்டாகிராம் பதிவர், தான் பயணித்த ஆட்டோவை ஓட்டிச் சென்ற இளைஞரின் தன்னம்பிக்கை நிறைந்த உழைப்பைக் கண்டு வியந்துபோய் அதனை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். வறுமை மற்றும் பொருளாதாரச் சூழல்கள் காரணமாக ஆட்டோ ஓட்டும் தொழிலை மேற்கொண்ட போதிலும், தன்னுள் இருக்கும் லட்சியக் கனவைச் சிறிதும் கைவிடாமல் போராடி வரும் அந்த இளைஞரின் கதை இணையத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அமேதி மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ் திவாரி என்ற அந்த இளைஞர், தனியார் பள்ளியில் வேலை கிடைக்காததால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக ஆட்டோ ஓட்டத் தொடங்கியுள்ளார். ஆனால், அந்த ஆட்டோவை வெறும் பிழைப்பிற்கான வழியாக மட்டும் பார்க்காமல், தனது அரசு ஆசிரியர் கனவை அடைவதற்கான பாலமாக மாற்றியுள்ளார். ஆட்டோவின் டேஷ்போர்டில் மொபைல் ஸ்டாண்ட் அமைத்து, வாகனத்தைச் செலுத்தும்போதும் சிக்னல்களில் நிற்கும்போதும் மொபைலில் இயங்கும் ‘சூப்பர் TET’ தேர்வுக்கான வகுப்புகளைக் கவனித்து வருகிறார். ‘வாழ்க்கையில் பிரச்சனைகள் எந்த அளவிற்குப் பெரிதாக வருகிறதோ, அந்த அளவிற்கு அதற்கான தீர்வை நோக்கி என் சிந்தனை செல்லும்’ என்று அந்த இளைஞர் நம்பிக்கையோடு கூறிய வார்த்தைகள், அவரைக் நேர்காணல் செய்த பதிவர் உட்பட இணையத்தில் அந்த வீடியோவைப் பார்த்த லட்சக்கணக்கானோரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
ஆசிரியராக மாறி அரசுப் பணியைப் பெறுவது மட்டுமல்லாமல், வருங்காலத்தில் சொந்த உழைப்பில் ஒரு பைக்கை வாங்கி உலகம் முழுவதும் சுற்றி வர வேண்டும் என்ற தனது மற்றொரு பிரம்மாண்டக் கனவையும் அவர் சிரித்த முகத்தோடு பகிர்ந்துள்ளார். பயணிகளைத் தங்களது இலக்குக்குக் கொண்டு சேர்க்கும் வேளையிலேயே, தானும் தனது சொந்த லட்சிய இலக்கை அடைவதற்காக ஒவ்வொரு நொடியையும் செதுக்கி வரும் இந்த இளைஞரின் முயற்சி, சவால்களால் தவிக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மாபெரும் வழிகாட்டியாக அமைந்துள்ளது. மேலும் சூரஜ் திவாரியின் இந்த அசைக்க முடியாத தன்னம்பிக்கை மற்றும் உழைப்பை இணையவாசிகள் பலரும் பாராட்டி வருவதுடன், அவரது அரசுத் தேர்வு வெற்றி பெற தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
