LATEST NEWS
பகீர்..! மதுபானக் கடையில் நின்றுகொண்டிருந்த ஊழியர்.. திடீரென நெஞ்சில் பாய்ந்த ஆணி.. தப்பியோடிய மர்ம நபர் யார்..? மர்ம மரணத்தின் பின்னணி என்ன..? வைரலாகும் திக் திக் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர், நெஞ்சில் திடீரென ஆணி பாய்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் சுனில் அனில் தாய்டே என அடையாளங்காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் மாநில வங்கி சௌக் அருகிலுள்ள மதுபானக் கடையில் திங்கள்கிழமை மாலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்திருந்த சுனில் கடையின் கவுண்டர் அருகே நின்றுகொண்டிருக்க, மற்றொரு நபர் கடையை நோக்கி வருகிறார். அடுத்த சில விநாடிகளில் சுனில் திடீரென தரையில் சுருண்டு விழுகிறார்; அதேநேரத்தில் வந்த நபர் அவசர அவசரமாகக் கடையை விட்டு வெளியேறுகிறார். ஆரம்பத்தில் கடையில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை.
பின்னர், சக ஊழியர்கள் சுனிலை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரவு 7.30 மணியளவில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், நள்ளிரவு 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிளைவுட் அழுத்தக் கருவிகளில் பயன்படுத்தப்படும் இரும்பு ஆணி ஒன்று, சுனிலின் நெஞ்சைப் பலமாகத் துளைத்ததே அவரது உயிரிழப்பிற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், கவுண்டரில் நின்று கொண்டிருந்த சுனிலின் நெஞ்சில் அந்த ஆணி எவ்வாறு பாய்ந்தது, தப்பியோடிய நபருக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்பது குறித்து அம்பாட் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆணி எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
