LATEST NEWS
நேபாளத்தை மூழ்கடித்த வெள்ளத்தின் பின்னணியில் சீனா…? வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்… எல்லையில் நடந்த ரகசிய வேலையும் மௌனம் சாதிக்கும் சீனாவும்..!!
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். எல்லையோரக் கிராமங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மழை ஏதும் பெய்யாத சூழலில் திடீரென சீறிப்பாய்ந்த இந்த வெள்ளத்திற்கு, சீன எல்லைப் பகுதியில் ஆற்றின் குறுக்கே ஏற்பட்ட அடைப்பு உடைந்ததே காரணம் என்றும், சீனப் பகுதியில் நடந்த கட்டுமானங்கள் மற்றும் இயற்கை மாறுபாடுகளே இந்த அழிவைத் தூண்டின என்றும் நேபாள பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
சீனா தனது திபெத் எல்லைப் பகுதியில் அமைத்துள்ள ‘சியாவோகாங்’ குடியிருப்புகள் மற்றும் திரிசூலி ஆற்றின் இயல்பான பாதையை மறித்து மேற்கொண்ட கட்டுமானப் பணிகளே இத்தகைய இயற்கைச் சமநிலையின்மைக்கு வழிவகுப்பதாக நேபாளத் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு முன்பே சீனப் பகுதியில் ஆபத்தான முறையில் நீர்மட்டம் உயர்ந்த நிலையில், அதுகுறித்த எந்தவொரு முன்எச்சரிக்கை தகவலையும் சீனா நேபாளத்திற்கு சரியான நேரத்தில் வழங்கவில்லை என்றும், தகவலை மறைத்ததே அதிக அளவிலான உயிர்ச்சேதத்திற்கு முக்கியக் காரணம் என்றும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா முற்றிலும் மறுத்து இது ஒரு “போலி செய்தி” என்று தெரிவித்து நிராகரித்துள்ளது. நேபாளப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மலையில் பனி மற்றும் பாறைச் சரிவு ஏற்பட்டு, அது ஆற்றை மறித்ததால் தான் இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக சீன தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், இந்த பேரிடரால் சீனப் பகுதியிலும் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சீனா, பரஸ்பரம் குற்றஞ்சாட்டுவதை விடுத்து நிவாரண மற்றும் மீட்புப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறி நேபாளத்திற்கு அவசரகால உதவிகளை அறிவித்துள்ளது.
