LATEST NEWS
திகிலூட்டும் வீடியோ..! பயிற்சியின் போது விபத்து… பீரங்கி வெடித்ததில் வங்கதேச ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழப்பு..!!
வங்கதேசத்தில் நடைபெற்ற ராணுவப் பயிற்சியின் போது சீன தயாரிப்பு பீரங்கி ஒன்று பயங்கரமாக வெடித்துச் சிதறிய விபத்தில், இரண்டு ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வங்கதேசத்தின் சட்டோகிராம் பகுதியில் அமைந்துள்ள ஹதாசாரி துப்பாக்கிச் சூடு பயிற்சி மையத்தில் நேற்று இந்த கொடூர விபத்து அரங்கேறியுள்ளது. ராணுவ வீரர்கள் பீரங்கிக்குள் இருந்து இலக்குகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பீரங்கிக்குள் இருந்த இரு வீரர்கள் உயிரிழந்ததுடன், அங்கிருந்த ராணுவ அதிகாரி ஒருவர் பலத்த காயமடைந்தார். படுகாயமடைந்த அதிகாரி உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, தலைநகர் டாக்காவில் உள்ள கூட்டு ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான பீரங்கி, சீனாவால் வடிவமைக்கப்பட்டு வங்கதேச ராணுவத்தால் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ‘Type 59’ என்ற பழமையான போர் பீரங்கி வகையாகும். இது நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ‘Type 59G Durjoy’ ஆக மேம்படுத்தப்பட்டிருந்தாலும், இதன் அடிப்படை கட்டமைப்பு பழமையானது என்பதால் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இந்த விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதா அல்லது வெடிமருந்து கோளாறா என்பது குறித்து வங்கதேச ராணுவம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
