LATEST NEWS
“முடிவு என்னன்னு முன்னாடியே தெரிஞ்சிடுச்சு போல..” இந்தியா vs பாகிஸ்தான் பைனலை புறக்கணித்த ACC தலைவர்…! பங்கமாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்..!!
ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மொஹ்சின் நக்வி, ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் கிரிக்கெட் இறுதி நாளில் கலந்துகொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய கமிட்மென்ட்கள் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தங்கம் வெல்வதற்கான இந்த ஆவேசமான இறுதிப்போட்டியைத் தவறவிடுவதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும், தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களுக்கான போட்டிகளில் களம் காணும் நான்கு அணிகளுக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
போட்டிகளுக்கு முன்னதாக ACC-ன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், “2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். பிற வேலைகள் காரணமாக என்னால் நகோயாவுக்கு வர முடியவில்லை என்றாலும், இந்த விறுவிறுப்பான போட்டிகளைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று நக்வி கூறியுள்ளார். இதைக் கண்ட இணையவாசிகள், தோல்வியையும் அவமானத்தையும் தவிர்க்கவே அவர் வரவில்லை எனக் கிண்டல் செய்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் “போட்டியின் முடிவு அவருக்கு முன்பே தெரியும், அதனால் தான் வரவில்லை” என்றும், சிலர் அவரை “டிராபி சோர்” (கோப்பைத் திருடன்) என்றும் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
ACC தலைவரான மொஹ்சின் நக்வி ஏற்கனவே பல கோப்பை சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2025 ஆடவர் ஆசியக் கோப்பை மற்றும் 2026 மகளிர் ஆசியக் கோப்பைத் தொடர்களில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் உள்நாட்டு அமைச்சராகவும் இருக்கும் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற இந்திய அணிகள் மறுத்துவிட்டன. இந்த இரு சம்பவங்களிலும் இந்திய அணிகள் மேடையில் கோப்பையைப் பெற்றுக்கொள்ளாமலேயே தங்களின் வெற்றிக் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
