LATEST NEWS
பெண்களின் வலியைப் புரிஞ்சுகோங்க… குழந்தை பெற முடியாதது மனைவியின் தவறு அல்ல..! விவாகரத்து கோரிய கணவனுக்கு உயர் நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு.!!
மனைவி கருத்தரிக்க இயலாத காரணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, அதை மனைவியின் ‘கொடுமை’ எனக் கூறி விவாகரத்து பெற முடியாது என்று மதராஸ் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குழந்தை இல்லாத நிலை மட்டுமே திருமண வாழ்வின் கொடுமையாகிவிடாது என்றும், ஒரு தம்பதியருக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக மனைவியை மட்டும் குற்றவாளியாகச் சித்தரிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. மலட்டுத்தன்மைக்கான மருத்துவச் சிகிச்சைகளின் போது பெண் எதிர்கொள்ளும் வலிகள், ஹார்மோன் ஊசிகள், பரிசோதனைகள் மற்றும் தொடர்ச்சியான மன உளைச்சல்களைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், குடும்பத்தைக் காப்பாற்ற இத்தகைய கடுமையான சிகிச்சைகளை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளும் மனைவியின் நடத்தை, திருமண பந்தத்தை நிராகரிப்பதாகவோ அல்லது கணவனுக்கு இழைக்கப்படும் கொடுமையாகவோ ஆகாது என்று குறிப்பிட்டது.
திருமணம் என்பதன் ஒரே நோக்கம் குழந்தையைப் பெற்றுக்கொள்வது மட்டுமே அல்ல என்றும், குழந்தை பிறக்கவில்லை என்பதற்காகத் திருமண பந்தத்தில் ஒரு துணை தோல்வியடைந்துவிட்டார் எனக் கருத முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, மனைவியின் கொடுமையைக் காரணம் காட்டி விவாகரத்து கோரிய கணவனின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது.
