LATEST NEWS
பாசமா..? பணமா..? “என் பேத்தியை வளர்த்ததுக்கு 45 லட்சம் கொடு!” – சொந்த மகனை கோர்ட்டுக்கு இழுத்த பெற்ற தாய்.. ஏன் தெரியுமா.? உலகளவில் விவாதத்தைக் கிளப்பிய சம்பவம்..!!
சீனாவில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், தனது பேத்தியை 15 ஆண்டுகள் வளர்த்ததற்காகச் சொந்த மகனிடமே ரூ.45 லட்சம் பராமரிப்புக் கட்டணம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது உலகளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஷாங்காய் நீதிமன்றத்தில் ‘சு’ என்ற தாய் தாக்கல் செய்த மனுவில், தனது மகன் ‘லியாங்’ கடந்த 2014-இல் விவாகரத்து பெற்றபோது பேத்திக்கு 4 வயது மட்டுமே ஆகியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு மகளின் கல்வி, மருத்துவம் மற்றும் அன்றாடச் செலவுகள் அனைத்தையும் தனது சொந்தப் பணத்திலேயே கவனித்து வந்ததாக அவர் குமுறியுள்ளார்.
சமீபத்தில் மகன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, குழந்தையைத் தாயிடமே விட்டுவிட்டுப் புது மனைவியுடன் தனியாகச் சென்றதால் இப்பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. முதுமை மற்றும் பொருளாதார நெருக்கடியால் வாடும் தாய், தன் மகன் ஒரு தந்தையாகக் கடமை தவறவிட்டதால் தனக்கு 3,60,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.45 லட்சத்திற்கும் மேல்) இழப்பீடு வேண்டும் எனக் கோரியுள்ளார். இதற்கு லியாங் வாதாடுகையில், தனக்குக் குறைந்த வருமானமே இருந்ததாகவும், தன் சக்திக்கு உட்பட்டுப் பண உதவி செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சீனாவில் முதியவர்கள் மீது சுமத்தப்படும் இந்த “ஊதியமில்லா உழைப்பு” மற்றும் குழந்தை பராமரிப்புச் சுமை குறித்துச் சட்ட நிபுணர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். குழந்தைகளை வளர்க்கும் முதல் பொறுப்பு பெற்றோருக்கே உரியது என்றும், அவர்களால் முடியாத போது மட்டுமே தாத்தா-பாட்டி உதவ வேண்டும் என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். கூட்டுக்குடும்பப் பாரம்பரியம் கொண்ட ஆசியக் கலாச்சாரத்தில், இந்த வினோத வழக்கு பாசத்திற்கும் கடமைக்கும் இடையே உள்ள பொருளாதாரப் பொறுப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
