LATEST NEWS
“நாங்க போடாத ரோட்டுலயா போயிட்டு இருக்காரு..?” – அமைச்சர் பேச்சால் ஆவேசமடைந்த எ.வ.வேலு… அவையில் சலசலப்பு, சபாநாயகர் அதிரடி தலையீடு..!!!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சாலை உள்கட்டமைப்பு மற்றும் முந்தைய திராவிட ஆட்சிகளின் சாதனைகள் குறித்து திமுக மூத்த தலைவர் எ.வ.வேலு எழுப்பிய கேள்விகள், அவையில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய அமைச்சரின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அவர், “நாங்க போடாத ரோட்டுலயா இப்ப போயிட்டு இருக்காரு?” என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இத்தனை ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகள் உள்கட்டமைப்புத் துறையில் எதுவுமே செய்யவில்லை என்பது போலப் பேசுவது நியாயமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்த எ.வ.வேலு, “ஆட்சிக்கு வந்த வெறும் 100 நாட்களில் எல்லாப் பணிகளையும் முழுமையாகக் கட்டி முடித்துவிட்டீர்களா?” என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். மேலும், முந்தைய ஆட்சிக் காலங்களில் தொலைநோக்குப் பார்வையுடன் போடப்பட்ட தரமான சாலைகள் மற்றும் பாலங்கள் மூலமாகவே தற்போதைய போக்குவரத்து கட்டமைப்பு சீராக இயங்கி வருகிறது என்பதையும் அவர் அவையில் திட்டவட்டமாகப் பதிவு செய்தார்.
திமுக உறுப்பினர்களுக்கும் தற்போதைய அமைச்சருக்கும் இடையே விவாதம் முற்றி அவையில் கடுமையான சலசலப்பும், காரசாரமான வாக்குவாதங்களும் நீடித்தன. இரு தரப்பினரும் மாறி மாறி முழக்கங்களை எழுப்பியதால் அவையில் பெரும் பதற்றம் நிலவியது. இதனைத் தொடர்ந்து, உடனடியாகத் தலையிட்ட சபாநாயகர், உறுப்பினர்களைத் தங்களது இருக்கைகளில் அமருமாறு அறிவுறுத்தி, நிலைமையைச் சீர்செய்து அவையை அமைதிப்படுத்தினார்.
