LATEST NEWS
சர்க்காரியா கமிஷன் முதல் ED ஆவணங்கள் வரை… உதயநிதிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்… சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய குற்றச்சாட்டுகள்..!!
தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சியான திமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தனது உரையின் போது வரலாற்றுச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், சர்க்காரியா கமிஷன் அறிக்கையைக் குறிப்பிட்டு, அன்றைய வீராணம் திட்டத் டெண்டரில் தயாநிதி மாறன் 2.5% கமிஷன் கேட்டதாக பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தொடர்ந்து, திமுகவின் ஊழல்கள் குறித்த ஆவணங்களை அவையில் காட்டிப் பேசிய முதலமைச்சர் விஜய், அமலாக்கத்துறை சேகரித்த ஆதாரங்களைச் சுட்டிக்காட்டினார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் பார்களை நடத்துபவர்களிடமிருந்து ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் சட்டவிரோதமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அந்தப் பணப் பலன்களை மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரடியாக அடைந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, சட்டம்-ஒழுங்கு விவகாரம் குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தங்களுக்கு எதிராக எழுப்பப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்குத் தைரியமிருந்தால் ஆதாரங்களை முதலமைச்சர் சட்டப்பேரவையிலேயே வெளியிட வேண்டும் என்று சவால் விடுத்திருந்தார். உதயநிதியின் அந்தச் சவாலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே, முதலமைச்சர் விஜய் இந்த ஆவணங்களை அவையில் முன்வைத்துத் தாக்குதல் நடத்தியது சட்டமன்றத்தில் பெரும் அரசியல் புயலையும் அனல் பறக்கும் காரசார விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
