LATEST NEWS
பெண்களைப் பத்தி ‘டபுள் மீனிங்’ மற்றும் ‘டிரிபிள் மீனிங்’களில் தரம் தாழ்த்திப் பேசினால்.. முதல்வர் விஜய் சட்டசபையில் எச்சரிக்கை..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், பெண்களைப் பற்றி அவதூறாகவும் அசிங்கமாகவும் பேசுபவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். சமீபகாலமாகத் தமிழகத்தில் அரசியலுக்காகவும், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளுக்காகவும் பெண்களைத் தரம் தாழ்த்திப் பேசுவது அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்பொழுது இது ஒரு “ஆபாச நதியாகவும், வன்ம நதியாகவும் ஓடுகிறது” என்று தனது வேதனையைப் பதிவு செய்தார். குறிப்பாக, மேடைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் பெண்களைப் பற்றி ‘டபுள் மீனிங்’ மற்றும் ‘டிரிபிள் மீனிங்’களில் தரம் தாழ்த்திப் பேசுவதை அனைவரும் உடனடியாகத் தவிர்க்க வேண்டும் என்று அவர் திட்டவட்டமாகக் கேட்டுக்கொண்டார்.
நான் இன்று இந்த உயர்ந்த இடத்தில் அமர்ந்திருப்பதற்குப் பெண்கள்தான் மிக முக்கியமான காரணம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், இனிமேல் பெண்களைப் பற்றி யார் அசிங்கமாகப் பேசினாலும் சட்டம் தன் கடமையை மிகக் கடுமையாகச் செய்யும் என்று எச்சரித்தார். அவ்வாறு தவறு செய்பவர்கள் மீது சட்டம் பாயும்போது, “அதனால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நான் பொறுப்பாக முடியாது; இதில் எவ்வித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது” என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்தார். பெண்களின் பாதுகாப்பிலும் அவர்களின் கண்ணியத்தைக் காப்பதிலும் தனது அரசு எவ்வித சமரசமும் செய்துகொள்ளாது என்பதை இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவர் மிகத் தெளிவாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
