LATEST NEWS
“என் மகளைக் கொன்னுட்டாங்க..! காலைல போன்ல நல்லாதான் பேசுனா…” கல்லூரி விடுதியில் 21 வயது செவிலியர் மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு..! தற்கொலை அல்ல கொலைதான் என பெற்றோர் பகீர் குற்றச்சாட்டு..! அமேதியில் தொடரும் மர்மம்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள இந்திரா காந்தி செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரியில் GNM இறுதி ஆண்டு படித்து வந்த மாணவி தீப்தி யாதவ் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுல்தான்பூர் மாவட்டத்தின் சயீதுல்லாபூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், விடுதியில் தங்கிப் படித்து வந்தார். வெள்ளிக்கிழமை அன்று மாணவியின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல் துறையினரும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அதாவது காலை 11 மணியளவில், தீப்தி தனது குடும்பத்தினரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, தனக்குத் தேர்வுகள் தொடங்கவிருப்பதால் வீட்டிற்கு வர முடியாது என்று இயல்பாகப் பேசியுள்ளார். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர் இறந்துவிட்டதாக வந்த செய்தி குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதால், இது தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல் துறை விசாரித்து வருகிறது.
ஆனால், மாணவியின் குடும்பத்தினர் இது தற்கொலை அல்ல; கொலை செய்யப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கின்றனர். மேலும், தாங்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக உடலை பிரேதப் பரிசோதனைக்கு காவல்துறை கொண்டு சென்றதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து நேர்மையான மற்றும் நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது செல்போன் அழைப்புகள் மற்றும் தடயங்களை வைத்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
