தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்குத் தண்டனையா..? வெகுமதியா…? மனோ தங்கராஜ் எழுப்பிய 9 முக்கியக் கேள்விகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்குத் தண்டனையா..? வெகுமதியா…? மனோ தங்கராஜ் எழுப்பிய 9 முக்கியக் கேள்விகள்..!!

Published

on

தொகுதி மறுவரையறை விவகாரம் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் தண்டனையா அல்லது வெகுமதியா என்றும், இது ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான வெள்ளோட்டமா என்றும் திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள்தொகை அடிப்படையிலான கணக்கீடாக மட்டும் இல்லாமல் கூட்டாட்சித் தத்துவம், மாநில உரிமைகள், நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் குரல் வலிமை, சிறுபான்மையினர் மற்றும் விழிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவம் மற்றும் சமமான ஜனநாயகப் பங்கேற்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அணுகப்பட வேண்டிய பிரச்சினை இது என்றும், வெறும் 50 சதவீத தொகுதி உயர்வு சமநீதிக்கான தீர்வல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

1971-ல் தமிழ்நாட்டின் மக்கள்தொகை 4.1 கோடியாகவும், உத்தரப் பிரதேசத்தின் மக்கள்தொகை 8.3 கோடியாகவும் இருந்த நிலையில், அப்போது தமிழ்நாட்டிற்கு 39 எம்.பி. இடங்களும் உத்தரப் பிரதேசத்திற்கு 85 இடங்களும் இருந்ததாக மனோ தங்கராஜ் சுட்டிக்காட்டியுள்ளார். உத்தரகாண்ட் பிரிக்கப்பட்ட பிறகு உத்தரப் பிரதேச இடங்கள் 80 ஆகக் குறைந்ததாகவும், 2026-ல் தமிழ்நாட்டின் மக்கள்தொகை 8 கோடியாகவும் உத்தரப் பிரதேசத்தின் மக்கள்தொகை 24 கோடியாகவும் உயர்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின் பேரில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைச் செயல்படுத்திய மாநிலங்களுக்கும் செயல்படுத்தாத மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான 50 சதவீத உயர்வு வழங்குவது தென் மாநிலங்களை வஞ்சிக்கும் செயல் என்றும், குடும்பக் கட்டுப்பாட்டைத் திறம்படச் செயல்படுத்தும் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் இருக்க இந்திரா காந்தி கூறிய கருத்தின் சாரம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களின் குரலைக் குறைப்பது அநீதி என்பதே என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவையில் தற்போது உத்தரப் பிரதேசத்திற்கு தமிழ்நாட்டைவிட 41 இடங்கள் கூடுதலாக உள்ளதாகவும், முன்மொழியப்படும் 50 சதவீத உயர்வின்படி உத்தரப் பிரதேச இடங்கள் 120 ஆகவும் தமிழ்நாட்டின் இடங்கள் 58 ஆகவும் உயரும்போது இரு மாநிலங்களுக்கும் இடையிலான வித்தியாசம் 41-லிருந்து 62 ஆக அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்றவும், திருத்தவும், தடுக்கவும் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையே முக்கியம் என்பதால் ஒரே விகிதத்தில் இடங்களை உயர்த்துவது தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவப் பாதிப்பைச் சரிசெய்யாது எனவும் விளக்கியுள்ளார்.

அமித்ஷா முன்மொழியும் 50 சதவீத இட உயர்வின் நோக்கம் மக்களவை இடங்களை 800-க்கு மேல் உயர்த்திப் பின்னர் தொகுதிகளை மறுவரையறை செய்வதாகும் என்ற குற்றச்சாட்டை முன்வைத்த மனோ தங்கராஜ், அசாம் மற்றும் காஷ்மீரில் சிறுபான்மையினரின் வாக்கு வலிமையைப் பாதிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டதைப் போல நாடு முழுவதும் தொகுதி எல்லைகளை மாற்றி பாஜகவுக்குச் சாதகமான தொகுதிகளை 10 சதவீதம் வரை அதிகரிப்பதே மோடி அரசின் நோக்கம் எனக் கூறியுள்ளார். மேலும், மொழிவழி மாநிலங்களுக்குப் பதிலாக 75 ‘ஜன்பத்’ மண்டலங்களாக இந்தியாவைப் பிரிப்பது ஆர்.எஸ்.எஸ். திட்டம் என்றும், தற்போது நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு 241 மக்களவை மற்றும் 118 மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ள நிலையில் இரு அவைகளிலும் பாஜக சார்பில் ஒரு கிறிஸ்தவரோ இஸ்லாமியரோ இல்லாத சூழலில், சுமார் 24 கோடி மக்கள்தொகை கொண்ட கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் எங்கே என்றும், ஜெர்ரிமாண்டரிங் மூலம் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போவதுடன் தென் மாநிலங்களின் தேவையும் இல்லாமல் போய் இங்கிருந்து பிரதமர் உருவாகும் நிலையும் இல்லாமல் போகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தொகுதி மறுவரையறைக்கான அடிப்படையாக இருந்த மக்கள்தொகை என்ற வாசகத்தை அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கித் திருத்தம் செய்யப்பட உள்ளதால், அரசமைப்புச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது என்ற வாதம் வலுவிழப்பதாகவும், அந்தத் திருத்தம் உடனடியாக அமலுக்கு வருவதால் 2029 மக்களவைத் தேர்தலிலேயே தொகுதி மறுவரையறை அமல்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 2019–24 காலகட்டத்தில் ஒரு எம்.பி.க்கு ஐந்து ஆண்டுகளில் சராசரியாக வெறும் 1 மணி நேரம் 36 நிமிடங்களே பேச வாய்ப்பு கிடைத்ததாகவும், அந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்றம் 1,370 மணி நேரமே நடைபெற்றதாகவும் (ஆண்டுக்கு சராசரியாக 274 மணி நேரம்; 1952–57 காலகட்டத்தில் 3,700 மணி நேரம் நடைபெற்றது), ஒரு எம்.பி.யைத் தேர்ந்தெடுக்க தேர்தல் ஆணையம் ரூ.9 கோடி செலவிடுவதாகவும், வேட்பாளரின் அனுமதிக்கப்பட்ட செலவு ரூ.95 லட்சம் என்றாலும் உண்மையான செலவு பல கோடிகளாகிறது எனவும், நாடாளுமன்றத்தை நடத்த ஆண்டுக்கு ரூ.1,600 கோடி செலவாகிறது எனவும், ஐந்து ஆண்டுகளில் ஒரு எம்.பி.க்கான சம்பளச் செலவு ரூ.1.52 கோடி எனவும் சுட்டிக்காட்டி, 850 எம்.பி.க்கள் கொண்ட அவையில் விவாத நேரம் குறைந்து நாடாளுமன்றம் மாநாட்டுக் கூட்டமாக மாறும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கட்சித் தாவலில் ஈடுபட்ட 20 எம்.பி.க்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அவர்கள் தொகுதி மறுவரையறை மசோதாவில் வாக்களிப்பது எப்படி நீதியாகும் என்றும், ஏற்கனவே 35 லட்சம் வாக்காளர்களின் SIR மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போதே அவர்களைத் தவிர்த்து தேர்தல் நடத்தி பாஜக வென்றது போன்ற தந்திரமே இது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தென்னிந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து 195 மக்களவை இடங்களாக அதிகரிக்கும் நிலையில், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கே சேர்த்து 180 இடங்களாக அதிகரிப்பது தெற்கை அழித்து வடக்கை வாழவைக்கும் செயல் என்றும், எனவே மக்கள்தொகைப் பெருக்கத்தைச் சீராக்கும் நோக்கில் 2126-ம் ஆண்டு வரை தொகுதி மறுவரையறையை நிறுத்தி வைக்க வேண்டும் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கையை 550 ஆக மட்டுப்படுத்த வேண்டும் என்ற மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழுவின் 2025 பரிந்துரைகளை ஏற்பதே அனைத்து மக்களுக்கும் நியாயமான முடிவை எட்ட ஒரே வழி என்றும் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in