LATEST NEWS
நெஞ்சை உலுக்கும் கொடூரம்..! 120 கி.மீ வேகத்தில் சென்று கவிழ்ந்த கார்: காருக்குள் உயிருடன் உடல் கருகி 6 நண்பர்கள் துடிதுடித்து பலி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட மிகக் கொடூரமான சாலை விபத்தில், ஹரியானாவைச் சேர்ந்த ஆறு நெருங்கிய நண்பர்கள் காருக்குள் உயிருடன் உடல் கருகி உயிரிழந்த சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தீபாவளிப் பண்டிகையைத் தொடர்ந்து கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, புனித நீராடுவதற்காக ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஹன்சி பகுதியிலிருந்து உத்தரப் பிரதேசம் ஹரித்வார் நோக்கிச் சென்றபோதே இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.
கடந்த நவம்பர் 9, 2026 அன்று அதிகாலை 4:50 மணியளவில் முசாபர்நகரின் பானிபட்-கதிமா தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 120 கி.மீ அதிவேகத்தில் சென்ற சொகுசு கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முதலில் சாலையோர மின் கம்பத்தின் மீது பலமாக மோதி, பின்னர் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சாலையின் மறுபுறம் தலைகீழாகக் கவிழ்ந்தது. கவிழ்ந்த அடுத்த சில நிமிடங்களிலேயே கார் முற்றிலும் தீப்பற்றி எரியத் தொடங்கியதால், காருக்குள் இருந்த இளைஞர்கள் தப்பிக்க முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்த போதிலும், காருக்குள் இருந்த ஆறு பேரின் உடல்களும் அடையாளம் காண முடியாத அளவிற்கு முற்றிலும் கருகிவிட்டன. உயிரிழந்தவர்கள் ராகிகர்ஹி மற்றும் மோத் கிராமங்களைச் சேர்ந்த அமன், அஜய், சாஹில், ராகுல் மற்றும் அங்கித் (இருவர்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ராகுலும் ஒரு அங்கித்தும் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவர். இந்த விபத்து குறித்து திதாவி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
