LATEST NEWS
“எங்க பொண்ணு உயிரோட தான் இருக்கா..” 3 நாட்களில் வரப்போகும் அந்த நல்ல செய்தி..? செஞ்சி சிறுமி வழக்கில் தாய் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்..!!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் இளைய மகள் ஹேமலதா, இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த அக்டோபர் 11-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி, அன்று இரவு தாயுடன் வீட்டின் உள்ளே தூங்கச் சென்றுள்ளார். ஆனால், மறுநாள் காலை பார்த்தபோது சிறுமி மாயமாகியிருப்பது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சுற்றியுள்ள வீடுகளிலும் ஊர் முழுவதிலும் தேடியும் சிறுமி கிடைக்காததால், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சிறுமியின் காணாமல் போன விவகாரம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டக் காவல்துறை உயர் எச்சரிக்கையுடன் செயல்படத் தொடங்கியது. நான்கு டி.எஸ்.பிக்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவலர்களைக் கொண்ட 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தேடுதல் வேட்டையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத சூழலில், வழக்கில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறி போராட்டங்கள் வலுத்தன. இதையடுத்து, வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த கூடுதல் அதிகாரிகளும் விசாரணைக் களத்தில் இறக்கப்பட்டு தேடுதல் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது.
மகள் காணாமல் போய் நாட்கள் பல கடந்த நிலையிலும், பெற்றோர் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கோயிலில் பூ போட்டுப் பார்த்ததில் நல்ல சகுனம் வந்திருப்பதாகவும், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நல்ல செய்தி கிடைக்கும் என்று காவல்துறையினர் தங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளதாகவும் சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார். சி.பி.சி.ஐ.டி-யின் இந்த தீவிர விசாரணையின் மூலம் சிறுமி ஹேமலதா விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் முழு கிராமமும் உள்ளது.
