LATEST NEWS
“நாங்க தான் ஒரிஜினல் டி.எம்.சி..!” கட்சியை பறிக்க துடிக்கும் அதிருப்தியாளர்கள்… தேர்தல் ஆணையத்தில் மம்தா தரப்பு அதிரடி விளக்கம்..!!
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு, முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. மொத்தமுள்ள 80 எம்.எல்.ஏக்களில் 58 பேர் அதிருப்தியாளர்களாக மாறி ரிதர்பா தலைமையில் தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். பெரும்பான்மை பலம் கொண்டிருப்பதால் இவர்களுக்கே சட்டமன்ற சபாநாயகர் எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்கியுள்ளார். தற்போது, இந்த அதிருப்தி குழுவினர் கட்சியின் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றியதோடு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சின்னம் தங்களுக்கே சொந்தம் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். தற்போதைய கட்சித் தலைமை மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்துவிட்டதாகக் கூறி அவர்கள் கட்சியைத் தங்கள் வசமாக்கத் தீவிரமாக முயன்று வருகின்றனர்
கட்சியையும் சின்னத்தையும் கைப்பற்ற அதிருப்தியாளர்கள் முயலும் வேளையில், மம்தா பானர்ஜி தரப்பு தேர்தல் ஆணையத்திடம் விரிவான விளக்கக் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது. அதில், கட்சியின் தற்போதைய தலைவர் மற்றும் நிர்வாகிகளைக் கொண்ட அமைப்பு முழுமையாகச் செல்லுபடியாகும் என்றும், கட்சியின் அரசியலமைப்பின்படி இந்த அமைப்பு நிலைக்குழுவின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உட்கட்சித் தேர்தலின்படி, தற்போதைய குழுவின் பதவிக்காலம் 2027 வரை அமலில் இருக்கும் என்பதால், கிளர்ச்சியாளர்களின் வாதம் சட்டப்படி செல்லாது என மம்தா தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அதிருப்தி குழுவினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மம்தா தரப்பு சில முக்கியக் கேள்விகளை முன்வைத்துள்ளது. கிளர்ச்சி அணியினரின் வாதம் உண்மையாக இருந்தால், கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பங்களைப் பயன்படுத்தி அவர்கள் எவ்வாறு 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், கடந்த ஜூன் 22 அன்று கிளர்ச்சிக் குழுவினர் நடத்திய சிறப்பு மாநாடு கட்சியின் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், அதன் முடிவுகளுக்கு எவ்வித சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லை என்றும் தேர்தல் ஆணையத்திடம் தெளிவுபடுத்தியுள்ளனர். தற்போது இரு தரப்பு ஆவணங்களையும் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.
