CRIME
“ஐயோ 8 வயது சிறுமிக்கு என்னாச்சு..?” சொந்த ஊர் சென்ற தாய்… மக்கள் கொடுத்த ஒற்றை க்ளூ.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கருமாங்கழனி கிராமத்தில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஸ்வநாத்-கல்பனா தம்பதியின் 8 வயது மகள் பெஸ்டி திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாகப் பெற்றோர் பிரிந்து வாழும் நிலையில், தாய் கல்பனா சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த மாநிலத்திற்குச் சென்றுள்ளார். இதனால் தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வீட்டில் இருந்த சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சிறுமியைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ஆரனேரி பேருந்து நிறுத்தத்தில் சிறுமி கையில் ஒரு பேக்குடன் நின்றுகொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமாகித் தேடப்பட்டு வரும் வேளையில், தற்போது ஸ்ரீபெரும்புதூர் அருகிலும் 8 வயது சிறுமி மாயமாகியிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிறுத்தத்திலிருந்து சிறுமி எங்கு சென்றார், அவருடன் யாரேனும் சென்றார்களா என்பது குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
