LATEST NEWS
பணி நேரத்துல இப்படியா..? அரசு ஆஸ்பத்திரியில் சீருடையுடன் நர்சுகள் குத்தாட்டம்.. வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை..!!
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்கள் சிலர் பணி நேரத்தில், தங்களது சீருடையுடன் சினிமா பாடல்களுக்குக் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையையும் கடுமையான விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்லும் சூழலில் இத்தகைய சம்பவம் அரங்கேறியுள்ளது.
மருத்துவமனையில் பணியாற்றி வரும் தலைமை செவிலியர் ஒருவர் இந்த மாதம் பணிநிறைவு பெற உள்ளதையொட்டி, அவருக்குப் பாராட்டு விழா ஒன்று மருத்துவமனை வளாகத்திலேயே நடத்தப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்ற 10-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பணி நேரத்தில் தங்களது சீருடையை மாற்றாமல் அங்கிருந்த ஸ்பீக்கர்களில் ஒலித்த சினிமா பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளனர்.
நோயாளி பராமரிப்பு மற்றும் அவசர சிகிச்சைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அரசு மருத்துவமனை வளாகத்திற்குள், பொறுப்பை மறந்து செவிலியர்கள் இவ்வாறு குத்தாட்டம் போட்ட விவகாரம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இது குறித்து மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, பணி நேரத்தில் ஒழுங்கீனமாகச் செயல்பட்ட செவிலியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
