LATEST NEWS
“பதவிக்கு ரூ.20 லட்சம் பேரமா..?”.. 50 அல்ல, 500 ஆடியோக்கள் வெளியிட்டாலும் அஞ்ச மாட்டேன்.. திமுகவை வெளுத்து வாங்கிய MLA முஸ்தபா..!!
மதுரை மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பகுதி மற்றும் வட்ட உள்கட்சிப் பதவிகளைப் பெற்றுத் தருவதற்கும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வார்டு சீட் ஒதுக்குவதற்கும் ₹15 லட்சம் முதல் ₹20 லட்சம் வரை பேரம் பேசப்பட்டதாக வெளியான இரண்டு ஆடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவின் உதவியாளர் மற்றும் மதுரை மாவட்ட தவெக நிர்வாகி ஒருவரின் குரலில் வெளியான இந்த ஆடியோக்களில், எம்.எல்.ஏ-விடம் பேசிவிட்டுப் பணத்துடன் வருமாறு குறிப்பிட்ட வார்டு பதவிக்காகப் பேரம் பேசும் உரையாடல்கள் இடம்பெற்றிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த எம்.எல்.ஏ முஸ்தபா, தன் மீதான இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்ததுடன், இது முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் திட்டமிடப்பட்ட சதி வேலை என்று விளக்கியுள்ளார். மேலும், “இது 3 மாதங்களுக்கு முன்பு வெளியான பழைய ஆடியோ. லஞ்சம் மற்றும் லாவண்யமற்ற தவெக ஆட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் திமுகவினரே இந்த போலிப் பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர்; 50 அல்ல, 500 ஆடியோக்கள் வெளியிட்டாலும் இது போன்ற பூச்சாண்டிகளுக்கு நான் பயப்பட மாட்டேன்” என்று திமுகவுக்குச் சவால் விடுத்துள்ள அவர், இந்த விஷமப் பிரச்சாரம் குறித்துக் கட்சித் தலைமைக்கும் காவல் துறைக்கும் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட 16 வார்டுகளிலும் தவெக கணிசமான செல்வாக்கைப் பெற்று, தங்களது கோட்டையாக மாற்றி வரும் வேளையில், இந்த உள்கட்சிப் பதவிப் பேரம் மற்றும் லஞ்சப் புகார் தொடர்பான ஆடியோக்கள் தவெக தலைமைக்கு தற்காலிகமாக ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், எதிர்க்கட்சிகள் இதனை முதன்மைப்படுத்தித் தவெக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்கத் தொடங்கியுள்ளதால், கட்சித் தலைமை தன் பக்க நியாயங்களை வலுவாக முன்வைப்பதோடு, இது போன்ற உள்கட்சிச் சிக்கல்களைக் கையாளுவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
