LATEST NEWS
“என் சொந்த ஊருக்குள்ள வர வெக்கமா இருக்கு…” 4 தொகுதியிலும் தோற்கடிச்சிட்டு இப்போ மண்ணின் மகன்னு சொன்னா.. சீமான் ஆதங்கம்…!!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தேர்தல் தோல்விகள் மற்றும் மக்களின் வாக்குப்பதிவு அரசியல் குறித்துத் தனது ஆழ்ந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு, சிறைக்கைதிகள் தப்பியோட்டம் உள்ளிட்ட தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்துப் பேசிய அவர், தேர்தல் களத்தில் தனக்குக் கிடைக்காத மக்கள் ஆதரவை எண்ணி வருத்தப்பட்டார்.
அப்போது பேசிய அவர், “நாலு தொகுதியிலும் என்னைத் தோற்கடித்துவிட்டு, இப்போது என்னை ‘மண்ணின் மகன்’ என்று பெருமையாகச் சொன்னால் எப்படி இருக்கும்? எனக்கு இப்போது என் சொந்த ஊருக்குள்ளே வருவதற்கே வெட்கமாகவும் அவமானமாகவும்தான் இருக்கிறது” என்று மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் வரலாறு, பாட்டன் பூட்டன் பெருமைகள் எனப் படித்துப் படித்து ஒவ்வொன்றையும் மக்களுக்காகத் தெருத் தெருவாக நின்று, பல்வேறு போராட்டங்களின் வாயிலாகத் தான் உரக்கப் பேசியதை அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வளவுதான் உண்மையாக உழைத்தாலும், பெற்ற தாயும் தந்தையும் தங்களது சொந்தப் பிள்ளைக்குச் சோறு ஊட்ட மறுத்தால் வேறு யார் ஊட்டுவார்கள் என்று ஒரு தத்துவார்த்தமான கேள்வியையும் அவர் முன்வைத்தார். தேர்தல் நேரத்தில் வாக்குக்குக் காசு வாங்குவதையும், இலவசச் சீர்களை லஞ்சமாகப் பார்ப்பதையும் மக்கள் நிறுத்தாதவரை மாற்றத்தைக் கொண்டு வருவது கடினம் என்றும், மக்களின் இந்தத் தேர்தல் அணுகுமுறை தனக்குப் பெரும் மனவருத்தத்தைத் தருவதாகவும் சீமான் ஆவேசமாகத் தெரிவித்தார்.
