LATEST NEWS
“முதுகில் குத்தும் செயல்”.. தொகுதி மறுவரையறை மசோதா ஆதரவு.. ஸ்டாலினுக்கு பிரகாஷ் ராஜ் கடும் எச்சரிக்கை…!!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நடிகர் பிரகாஷ் ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக முன்வைத்த இரண்டு முக்கியக் கோரிக்கைகள் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறி ஆதரவு தெரிவிக்கப்படும் என திமுக விளக்கம் அளித்திருந்தது.
இது தொடர்பாக வெளியிட்ட காணொளி பதிவில், பாஜக அவசரமாகக் கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதா மிகவும் ஆபத்தானது என்றும், அது மதம், மொழி, இனம், சிறுபான்மையினர் மற்றும் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இவற்றை மக்களுக்கு உணர்த்திய திமுகவே மதவாத சக்திகளுக்குத் துணை போவது முதுகில் குத்தும் செயலாகும் எனவும், இது மக்களுக்குத் துரோகம் செய்யும் சுயநலமான முடிவு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், மாநில உரிமைகளுக்காகப் போராடி இந்தியாவிற்கே வழிகாட்டிய திமுக வரலாற்றுப் பிழையான முடிவை எடுத்திருக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். இன்றைய முடிவு அடுத்த தலைமுறையை நிர்ணயிக்கும் என்பதால், அடுத்த தலைமுறை தங்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைத் திமுகவே முடிவு செய்து முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
