LATEST NEWS
“எதை விற்கணும்னு எனக்கு யாரும் சொல்ல தேவையில்லை..! நேதன்யாகுவுக்கு டிரம்ப் கொடுத்த ‘ஷாக்’..! துருக்கி-அமெரிக்கா எப்-35 டீலில் நடந்தது என்ன..?!”
அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரிக்கும் ஐந்தாம் தலைமுறை அதிநவீன எப்-35 ஸ்டெல்த் போர் விமானங்களை துருக்கிக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், துருக்கி ஆக்கிரமிப்பு மனப்பான்மை கொண்டது என்றும், அந்நாட்டிற்கு எப்-35 போர் விமானங்களை வழங்குவது மத்திய கிழக்கின் அதிகாரச் சமநிலையை முற்றிலும் சீர்குலைத்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நேதன்யாகுவின் இந்த எதிர்ப்பிற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “நாங்கள் எதை விற்க வேண்டும் என்று எனக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். துருக்கி அமெரிக்காவிற்கு ஒரு மிகச்சிறந்த நட்பு நாடாக இருந்து வருவதாகவும், சிரியா விவகாரம் உள்ளிட்ட பிராந்தியப் பிரச்சினைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லை என்பதை ஒப்புக்கொண்ட போதிலும், அமெரிக்கா-துருக்கி இடையேயான உறவு வலுவாக உள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை துருக்கி வாங்கியதைத் தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டில் டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில் எப்-35 திட்டத்திலிருந்து துருக்கி நீக்கப்பட்டது. இருப்பினும், அண்மையில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின் போது, எஸ்-400 கொள்முதல் காரணமாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்கத் தயாராக இருப்பதாக டிரம்ப் சூசகமாகத் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாகவே துருக்கிக்கு மீண்டும் எப்-35 போர் விமானங்கள் வழங்கப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
