LATEST NEWS
மனசாட்சியே இல்லையா..? பழிவாங்க காதலிக்கு எச்.ஐ.வி ரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய கொடூரன்… கதறி அழுது உயிரை விட்ட இளம்பெண்..!!
ஐதராபாத்தில் தனது காதலைப் பெற்றோர் ஏற்க மறுத்ததால், காதலியின் உடலில் எச்.ஐ.வி பாதிப்புள்ள தனது சொந்த இரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய கொடூர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ரமணி என்பவர், மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி நிகழ்வு அரங்கேறியுள்ளது. பூ விற்கும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ரமணி, தனது குடும்பத்திலேயே முதல் பட்டதாரியாக வரவிருந்த நிலையில், ஏப்ரல் 10 அன்று தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
மநோஹர் என்ற அந்த இளைஞனுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்ததால், ரமணியின் பெற்றோர் இவர்களது திருமணத்திற்குத் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மனோஹர், ரமணிக்கும் இந்தத் தொற்று ஏற்பட்டால் அவளது பெற்றோர் வேறு வழியின்றி தங்களைச் சேர்த்து வைப்பார்கள் என்று கணக்குப்போட்டுள்ளார். இந்த விபரீத எண்ணத்தால், கடந்த மார்ச் 11 அன்று ஒரு சிரிஞ்சில்தனது இரத்தத்தை எடுத்து ரமணியின் உடலில் வலுக்கட்டாயமாகச் செலுத்தியுள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து கொலை முயற்சி வழக்கில் மனோஹர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்
இந்தக் கொடூரமான தாக்குதலால் ரமணி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையான அதிர்ச்சியைக் கையாண்டு வந்த வேளையில், சமூக ஊடகங்களின் பொறுப்பற்ற செயல் அவரது நிலையை மேலும் மோசமாக்கியது. ஒரு குறிப்பிட்ட யூடியூப்சேனல், வெறும் பார்வைகளுக்காக குற்றம் சாட்டப்பட்ட மனோஹரின் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞரை வைத்து ஒரு நேர்காணலை ஒளிபரப்பியது. அதில், மனோஹர் நிரபராதி என்றும், எச்.ஐ.வி இரத்தத்தை உடலில் செலுத்திக் கொள்ளும் யோசனையை ரமணிதான் கொடுத்தார் என்றும் கூறி பழிசுமத்தினர். ஏற்கனவே வாழ்க்கை சிதைந்து போயிருந்த ஒரு பெண்ணின் குணாதிசயத்தை லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் சீரழித்த இந்த விக்டிம் பிளேமிங், கொடுமையின் உச்சக்கட்டமாக அமைந்தது.
இந்தச் சமூக ஊடக அவதூறுகளையும், குணச்சித்திரக் கொலைகளையும் தாங்கிக் கொள்ள முடியாத ரமணி, தற்கொலைக்கு முன் ஒரு நெஞ்சை உருக்கும் வீடியோவை வெளியிட்டார். அதில், “சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரப்பி என் வாழ்க்கையையே ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டார்கள்” என்று கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார். ஒட்டுமொத்த குடும்பத்தின் கல்வி ஒளியாக மாறவிருந்த ஒரு பெண்ணின் எதிர்காலமும் கனவுகளும், ஒரு கொடூரனின் வக்கிரத்தாலும் சமூக ஊடகங்களின் பொறுப்பற்ற தனத்தாலும் முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்டது.
