LATEST NEWS
“உள்ளே சித்திரவதை நடக்குது” என் கர்ப்பிணி மனைவியோட வாழ ஆசையா இருக்கு.. தேனி சிறையிலிருந்து தப்பித்தது ஏன்.? அதிரடி வீடியோ வெளியிட்டு கைதி பரபரப்பு குற்றச்சாட்டு.!!
தேனி தேக்கம்பட்டி கிளைச்சிறையில் இருந்து அண்மையில் 17 கைதிகள் ஒன்றாகத் தப்பிய சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தப்பி ஓடிப் பின்னர் சரணடைந்த கைதி மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறை அதிகாரிகளின் கடுமையான சித்திரவதைகள் மற்றும் தரம் குறைந்த உணவு காரணமாகவே தாங்கள் சிறையை விட்டு வெளியேறினோம் என்று அவர் அந்த வீடியோவில் குற்றம் சாட்டியுள்ளார். சிறைக்குள் நடக்கும் அராஜகங்களை நீதிபதியிடம் நேரடியாகத் தெரிவித்துவிட்டு மீண்டும் சரணடைவதே தங்களின் திட்டமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் தற்போதுதான் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், தனது மனைவி கர்ப்பமாக இருப்பதால் தான் திருந்தி வாழ ஆசைப்படுவதாகவும் மீனாட்சி சுந்தரம் அந்த வீடியோவில் உருக்கமாகப் பேசியுள்ளார். போலீசார் தன்னைச் சுட்டுப் பிடிக்கப் போவதாகக் கூறப்படும் தகவலால் பயந்து, உயிருக்கு அஞ்சித் தப்பியோடியதாகக் குறிப்பிட்ட அவர், சிறையில் இருந்து தப்பியது 17 பேர் சேர்ந்த கூட்டுச் சதி என்றும், ஆனால் தம்மையும் தனது தம்பியையும் மட்டும் இதில் முக்கிய குற்றவாளிகளாகச் சித்தரித்துப் பழிபோடப் பார்க்கிறார்கள் என்றும் வேதனை தெரிவித்துள்ளார். தங்களுக்கு நேர்ந்த அநீதி குறித்து முதலமைச்சரும், நீதிபதியும் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கைதிகள் தப்பிய இந்த அதிரடிச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, தப்பியோடிய கைதிகளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகளில் ஒருவரான கல்யாணசுந்தரம் என்பவரது மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் சில குடும்பக் காரணங்களால் தான் இந்தச் சிறை தப்பல் அரங்கேறியுள்ளதாக டி.எஸ்.பி விஷ்ணுபிரியா முன்னதாக விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
