CRIME
“லவ் பண்ணல முகத்துல ஆசிட் ஊத்தி கொன்னுடுவேன்..” பள்ளி சிறுமிக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்.. 3 வருடங்களுக்கு பிறகு கிடைத்த கடுங்காவல் தண்டனை..!!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 2022ஆம் ஆண்டு 9ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த 19 வயதுடைய சூர்யா என்ற இளைஞர் காதலிக்குமாறு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். பள்ளிக்குச் செல்லும் போதும், வீடு திரும்பும் போதும் சிறுமியைப் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் மனமுடைந்த சிறுமி, சூர்யா தன்னைத் தொந்தரவு செய்வது குறித்து பெற்றோரிடம் தெரிவிப்பதாக எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூர்யா, “என்னைக் காதலிக்கவில்லை என்றால் முகத்தில் ஆசிட் வீசிக் கொன்று விடுவேன்” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாகச் சிறுமியின் தரப்பில் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில், சூர்யா குற்றவாளி எனத் தீர்ப்பளித்த நீதிபதி எஸ். எழில் அவருக்கான தண்டனைகளை அறிவித்தார். அதன்படி, குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் 12-வது பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.1,000 அபராதமும் (தவறினால் 1 மாதம் கூடுதல் சிறை), இந்திய தண்டனைச் சட்டத்தின் 506(2)-வது பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.5,000 அபராதமும் (தவறினால் 3 மாதங்கள் கூடுதல் சிறை) விதிக்கப்பட்டது.
இந்த இரு தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதன் மூலம், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையை சூர்யா அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பைத் தொடர்ந்து, குற்றவாளி சூர்யாவைச் சிறையில் அடைப்பதற்காகக் காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
